
தருமபுரி/மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 28 ஆயிரம் கன அடியில் இருந்து, நேற்று மாலை 6 மணிக்கு 57 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து உயர்வால் ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
அதேபோல, பிரதான அருவி, தொங்கு பாலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கியது. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் ஆற்றிலும், அருவிகளிலும் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது. கர்நாடகா வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக தருமபுரி மாவட்ட காவிரியின் கரையோர பகுதிகளை வனம், வருவாய் உள்ளிட்ட அரசுத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.