
கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக பகீரத பிரயத்தனம் செய்கிறது. அதேசமயம், விஜய்யை சாக்காக வைத்து கூட்டணி தலைமையான திமுகவை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மறைமுகமாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சமாக, விஜய்க்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு, கரூர் சம்பவத்தில் விஜய்யை சாடிய நீதிபதியை வம்புக்கு இழுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி.
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார், “கரூர் நிகழ்வு மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இதையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. 41 பேர் உயிரிழந்த நிலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளனர். அவர்களுக்கு தலைமைப் பண்பு இல்லை. இச்சம்பவத்துக்கு அவர்கள் பொறுப்பேற்காதது கண்டனத்துக்குரியது” என கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.