• October 11, 2025
  • NewsEditor
  • 0

அக்டோபர் 07 அன்று சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது.

அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் அந்த நபரை அடித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், பல்வேறு வீடியோக்கள் வெளியாகி திருமாவளவன் வருவதைப் பார்த்து குறுக்கே வந்து திடீரென வேகத்தடையில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிடுகிறார் அந்த நபர்.

பிறகு திருமாவளவன் கார் இடித்ததாக அங்கு சிறிய தகராறு நடக்கிறது. திருமாவளவனுடன் வந்த காவல்துறையினர் தகராறு செய்த நபரை அப்புறப்படுத்துகின்றனர் என்று அந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது.

இது குறித்து விசிக தலைவர் எம்.பி திருமாவளவன், “எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி’ என்பது தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.

பின்னணியில் உள்ள சதியைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக ஐயமற விசாரித்திட வேண்டுமெனக் கோருகிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித், “உயர் நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாகப் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று எக்ஸ் தளம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது மநீம தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், “தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *