
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாளின் தங்க கவசங்கள், நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு வருவதாக 1992-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுபற்றி திருவட்டார் போலீஸ் விசாரணை நடத்தியதில் 1974-ம் ஆண்டிலிருந்து 1992 வரை அப்போது கோவில் பூஜாரியாக இருந்த கேசவன் போற்றியின் உதவியால் பல நபர்கள் சேர்ந்து 15 கிலோ தங்கம், 68 கிராம் வெள்ளி மற்றும் தங்ககிரீடம், தங்க கவசம், தங்க கருட வாகனம் ஆகியவைகள் திருடப்பட்டதாக தெரியவந்தது.
கோவில் காவலாளி கோவிந்தன்பிள்ளை பிறழ் சாட்சியாக மாறியதால் அவரை தவிர்த்து 34 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோர்டில் விசாரணை நடக்கும் போது குற்றவாளிகளில் 10 பேர் பல்வேறு காரணங்களால் மரணமடைந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு சம்மந்தமான 106 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம் குற்றவாளிகளில் உயிருடன் இருந்த 24 பேரில் 23 பேர் குற்றவாளிகள் என 19.9.2019 அன்று தீர்பளித்தார். இதில் ஐயப்பன் (75), கோபாலகிருஷ்ணன் ஆசாரி ( 77), கோபிநாதன் (86), கிருஷ்ணம்மாள் (75), முத்துகுமார் (67), முத்துநாயகம் (61), வேலப்பன் நாயர் (72), சுப்பிரமணியரு (69), மகாராஜ பிள்ளை (80), கோபாலகிருஷ்ணன் (79), சங்கர குற்றாலம் (88), அப்புகுட்டன் (67), குமார் (68), முருகப்பன் (77) ஆகிய 14 – நபர்களுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. சுரேந்திரன் (59), ஜனார்த்தனன் போற்றி (66), மணிகண்டன் நாயர் (56), லெட்சுமணன் (66), கேசவாஜி (80), அய்யப்பன் ஆசாரி (68), அப்பாவு (88), ஆறுமுகம் ஆசாரி (86), முத்து கிருஷ்ணன் (80) ஆகிய 9 நபர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கியது கோர்ட்.
திருவட்டாறு கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 27 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குற்றவாளிகள் தரப்பில் சிறைத்தண்டனைய எதிர்த்து பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ராமச்சந்திரன், கோர்ட்டில் மேல்முறையீடு செய்த 23 பேரில் 5 பேர் விசாரணை நடக்கும் போது மரணமடைந்து விட்டதால் மீதமுள்ள 18 – பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் சாட்சிகளை தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கபடாததால் 19-9-2019-ல் கோர்ட் வழங்கிய சிறை தண்டனையை ரத்து செய்வதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலம் பரபரப்பாக நடந்து வந்த இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் சிறை தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.