
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முதல் முறையாக The Ba***ds of Bollywood என்ற பெயரில் புதிய வெப் சீரியஸ் தயாரித்து அதனை நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதேசமயம் ஆர்யன் கான் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி அவரைக் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே இந்த வெப் சீரியஸுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் வெப் சீரியஸில் தன்னைக் களங்கப்படுத்தும் விதமாக அவதூறான கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருப்பதாகவும், விசாரணை அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக வெப் சீரியஸைத் தயாரித்த ரெட் சில்லிஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இதையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஆர்யன் கான் அளித்த பேட்டியில், ”நெட்ஃபிக்ஸ் வெப்சீரியஸ் கற்பனையானது. இதில் உண்மையான அனுபவங்களால் ஈர்க்கப்பட்ட காட்சிகள் உள்ளன. ஆனால் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. பாலிவுட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து விவரிக்கும்போது நகைச்சுவையை எவ்வளவு தூரம் சேர்ப்பது என்பதில் கவனமாக இருந்தோம்.
அதேசமயம் யாரையும் அவமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தோம். சினிமா தொழில்துறையைப் பற்றி ஏதாவது ஒன்றைத் தயாரிக்கும்போது தொழில்துறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அதற்கு நிறைய மரியாதை கொடுக்க வேண்டியிருக்கிறது.
வெப்சீரியஸில் நகைச்சுவை பற்றிய நிகழ்வுகளை எழுதும் போது எனது குழுவினர் உணர்வுப்பூர்வமானவற்றில் எல்லை மீறி செயல்படுவதைத் தவிர்த்தனர். அப்படி இருந்தும் சில காட்சிகள் விவாதப்பொருளாக மாறின. பா***ட்ஸ் ஆப் பாலிவுட் வெப் சீரியஸில் பாலிவுட்டின் நையாண்டியோடு கொஞ்சம் மிகைப்படுத்தலும் கலக்கிறது.
நாங்கள் அதை வெளிப்படையாக திரைக்குக் கொண்டு வந்தோம். ஆனால் அதில் உண்மை சம்பவங்களால் கவரப்பட்ட காட்சிகளும் இருக்கும், மிகைப்படுத்தல்களும் இருக்கும். இது வெளிப்படையாக ஒரு ஆவணப்படம் அல்ல,” என்று ஆர்யன் கூறினார்.
ஷாருக்கான் மகள் சுஹானா கானும் இப்போது ஷாருக்கானோடு சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார்.