
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
அதிமுக – தவெக கூட்டணி
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அதிமுக – தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. ஏற்கெனவே அவர்கள் பாஜக கூட்டணியில் இருக்கும்போது தவெக எப்படி அவர்களுடன் வந்து சேரும்.
பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று விஜய் அறிவித்திருக்கிறார். அப்படியென்றால், அதிமுக – பாஜக – தவெக ஆகிய கட்சிகள் கூட்டணியாக இருக்குமா அல்லது பாஜகவைக் கழற்றிவிட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.
எனவே, அதிமுக தலைமை கூட்டணிக்குக் கூட நம்பத்தகுந்த கட்சியா என்கிற கேள்வி எழுகிறது” என்று பதிலளித்திருக்கிறார்.
விஜய் உயிருக்கு ஆபத்தா?
தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
அது குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியபோது, “கட்டுக்கதைகளைப் பேசுவதே அண்ணாமலையின் வாடிக்கையாக இருக்கிறது. அவர் கற்பனையாகவும், வியூகமாகவும் செய்திகளைப் பரப்பி வருகிறார். அரசியல் செய்ய வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.
பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இருந்தும், இன்னமும் அண்ணாமலை தலைவர் என்கிற மனப்பான்மையில் பேசி வருகிறார்.
விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக அவர் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில், அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் என்ன சூழல் நிலவுகிறது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.