• October 11, 2025
  • NewsEditor
  • 0

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது நண்பர்கள் சரஸ்வதிவிளாகம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அஜய். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த 06.11.2025 அன்று இரவு சுமார் 10 மணி அளவில் டீ குடிப்பதற்காக கொள்ளிடம் சாமியம் பைபாஸில் உள்ள பேக்கரிக்குச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட பட்டியல் இன இளைஞர்

அங்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் பேக்கரிக்கு வந்துள்ளனர். தமிழரசன் வண்டியில் அம்பேத்கர் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அந்த இளைஞர்கள் சாதி ரீதியாக தகாத வார்த்தைகளைப் பேசியதுடன் தமிழரசனையும் அவரது நண்பர்களையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த இரு பிரிவினருக்கும் ஒருவருக்கொருவர் எந்த அறிமுகமும் இல்லை, எந்த ஒரு முன்விரோதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாற்றுச் சமூகத்தினர் சாதி ரீதியாக மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த தமிழரசன் (19) சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தமிழரசன் கூறுகையில், “நானும் என் ஃப்ரண்ட்ஸும் நைட்டு வேலையை முடிச்சு போறப்ப டீ குடிக்க கடைக்குப் போனோம். நான், கடைக்கு முன்பகுதியில், என் டூவீலரில் உட்கார்த்து போன் பேசிட்டு இருந்தேன். அப்ப அங்கு வந்த நான்கு இளைஞர்கள், இது யாரு வண்டின்னு கேட்டார்கள்.

நான் என்னோட வண்டி என்றேன். என் வண்டியில் ஒட்டியிருந்த அம்பேத்கர் போட்டவும், நீல சிவப்பு கட்சிக்கொடியும் ஒட்டியிருந்ததைப் பார்த்துட்டுதான் அவர்கள் கேட்டனர். உடனே, சாதியைச் சொல்லி என்னைக் கேவலமாகவும், இழிவாவும் பேசி தாக்கினர்.

தமிழரசன்
தமிழரசன்

இதைப் பார்த்த என் ஃபிரண்ட்ஸ் ஓடி வந்து ஏன் அடிக்கிறீங்கன்னு கேட்டனர். உடனே, அவர்களையும் சேர்த்து அடித்தனர். என்னை முட்டி போடுன்னு சொன்னாங்க. நான் போட மாட்டேன்னு சொன்னேன். இதையடுத்து, என்னை தள்ளிவிட்டு சாவியை வச்சி முதுகில் கிழித்தனர். இந்தப் பிரச்னையைக் கேள்விப்பட்டு எங்க ஊரு பசங்க வந்ததும் ஓடிவிட்டனர்.

நான் இதுக்கு முன்னாடிலஅவர்களைப் பார்த்தது இல்லை. சாதிய வன்மத்தில் என்னை அடித்தனர். என்னைத் தாக்கிய மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மாரியப்பனிடம் பேசியபோது, “மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பட்டியலின இளைஞர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இளைஞர்கள் தப்பிக்க முயற்சித்தபோதும் தப்பிக்க முடியவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழரசனுக்கு முதுகில் சாவியால் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தலை மற்றும் முகத்திலும் அடிப்பட்டுள்ளது. பத்திற்கும் மேற்பட்டவர்கள் சாதி வெறியுடன் இதை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் மீது சாதி வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து, கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இல்லையெனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம்” என்றார்.

பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் தமிழரசன்
பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் தமிழரசன்

இது குறித்து கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் பேசினோம். “சாதி ரீதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் மீதும் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதில் இருவரைக் கைது செய்துள்ளோம். மற்ற இருவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *