• October 11, 2025
  • NewsEditor
  • 0

ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் டெல்லியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமிர் கான் முத்தாகி ஐநாவில் பயண விலக்கு பெற்றுள்ள தாலிபான் அமைச்சராவார். 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு இந்தியாவுக்கு தாலிபான் உயர் பொறுப்பிலுள்ள தலைவர் வருவது இதுவே முதன்முறையாகும்.

இந்தியா – ஆப்கானிஸ்தான்

இந்த பயணத்தில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகத்தை நிறுவுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் கடந்து ஆப்கானிஸ்தான் அமைச்சர் மேற்கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு கடும் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடந்த இந்த நிகழ்வில் பெண் பத்திரிகையாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. சில ஆண்கள் மட்டுமே அமைச்சருடன் உரையாடினர். தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகள் நிகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய மண்ணில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ளாததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளன.

திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, “பெண்கள் இல்லாமல் பத்திரிகையாளர் சந்திப்பை நடந்த தாலிபான் அமைச்சரை அனுமதித்தது ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கும் நடந்த அவமதிப்பதாகும். முதுகெலும்பில்லாத வெட்கக்கேடான நயவஞ்சகர்கள் கூட்டம்.” எனக் கூறியுள்ளார். மேலும் இதனை எதிர்த்து கேள்வி எழுப்பாத அறையில் இருந்த ஆண் பத்திரிகையாளர் வெளியேறாததையும் கண்டித்தார்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, “தாலிபான் பிரதிநிதி வருகையின் போது பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் நீக்கப்பட்டது குறித்து உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள் பிரதமர் மோடி.

பெண்களை அங்கீகரிப்பது உங்களைப் பொருத்தவரை ஒரு தேர்தலில் இருந்து அடுத்த தேர்தலுக்குச் செல்லும் வசதியாக மட்டுமே இருப்பதனாலேயே, பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்டுள்ள நாட்டின் திறமையான பெண்களுக்கு இத்தகைய அவமானம் நடந்துள்ளது.” என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, “இந்திய மண்ணில் நடந்த தாலிபான் அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டிருப்பது சாதாரண நிகழ்வு அல்ல.

மோடி அரசாங்கம் பெண்களின் கண்ணியத்தை முழுமையாகப் புறக்கணித்திருப்பதை இது பிரதிபலிக்கிறது. உலகம் இந்தியாவை சமத்துவத்தில் கட்டப்பட்ட ஜனநாயகமாகப் பார்க்கும்போது, இதுபோன்ற அவமதிப்பை அனுமதிப்பதன் மூலம் நாம் என்ன சொல்ல வருகிறோம்?

மோடி அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

எப்படி அவர்கள் இந்திய மண்ணில் பெண்கள் அவமதிக்கப்படுவதை அனுமதித்தார்கள்? அல்லது இதுதான் பெண்கள் விஷயத்தில் அரசின் நோக்கமா – மௌனம், விலக்கு மற்றும் சமர்ப்பிப்பு?

நரேந்திர மோடி மற்றும் ஜெய்சங்கர் எவ்வளவு பலவீனமானவர்கள் நீங்கள்? உங்களால் இந்தியப் பெண்களின் அடிப்படை கண்ணியத்தைக் கூட பாதுகாக்க முடியாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *