
சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் தோழிகளை முன் பின் தெரியாத நபர்கள் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற கொடூர செயல்கள், திருமணக் குறும்பு என்ற பெயரில் அரங்கேற்றப்படுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் நண்பர்கள் சிலர் மணப்பெண்ணின் இரண்டு தோழிகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. வைரலான வீடியோவின் படி, அந்த இரண்டு பெண்களும் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டுள்ளனர். இந்தச் செயலைச் செய்த மணமகனின் நண்பர்கள் அந்த மணப்பெண் தோழிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், சீனாவின் சில கிராமங்களில் திருமணத்தின்போது இது போன்ற ஹன் நாவோ என்ற பெயரில் கேளிக்கைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் சில சீன கிராமப்புறப் பகுதிகளில் பிரபலமான “ஹுன் நாவோ” என்ற திருமண குறும்பு, பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.