
நேற்று மாலை சமாஜ்வாடி கட்சி எம்.பி அகிலேஷ் யாதவ்வின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
இதற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனம் எழுந்தது. மேலும், இந்த முடக்கத்திற்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன், “இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ்வின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்படுவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று விமர்சித்திருந்தார்.
அஸ்வினி வைஷ்ணவின் பதில்
இந்த முடக்கம் குறித்து இன்று மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
“இது ஃபேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கை ஆகும். அவர்களது விதிமுறைகளுக்கு இவருடைய சில பதிவுகளால் ஒத்துப்போகாததால், ஃபேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் எங்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது” என்று பதிலளித்திருக்கிறார்.
85 லட்சத்திற்கும் மேல் உள்ள அகிலேஷ் யாதவின் ஃபேஸ்புக் பக்கம் தற்போது முடக்கம் நீக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.