
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தப் பிறகு, பள்ளிகள், கல்லூரிகள், தொழில்துறைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
தாலிபன் அமைச்சர் பயணம்
நேற்று முன்தினம், ஆப்கானிஸ்தானின் தாலிபன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி அரசியல் ரீதியாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு அமைச்சர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.
இந்தியா இன்னமும் தாலிபனின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தந்தது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு
அவரது வருகையையடுத்து நேற்று டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
அந்தச் சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவும் இல்லை… அனுமதிக்கப்படவும் இல்லை.
இது தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி உள்ளிட்ட பலர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில்
இந்தச் சம்பவம் குறித்து தற்போது வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கான அழைப்பிதழ்கள் ஆப்கானிஸ்தான் தூதரக அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளது. இந்திய அரசின் வரம்பிற்குள் ஆப்கானிஸ்தான் தூதரகம் வராது” என்று பதிலளித்துள்ளது.