
ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது ‘தேசியத் தலைவர்’ திரைப்படம்.
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை கௌதமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்குநர் பேரரசு, ஆர்.பி உதயகுமார், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாடலாசிரியர் சினேகன், “இந்தப் படம் எடுக்கப்போகிறோம் என முடிவானபோது, என்னிடம் பாடல் எழுத வேண்டும் என அணுகினார்கள்.
அன்றிலிருந்து 3-வது நாள் தேவர் ஜெயந்தி. அதற்குள் ஒருபாடலை எழுதி, இசையமைத்து, பாடல் பாடி வெளியிட வேண்டும் என்ற சூழல். அதற்கு என்னை தேர்வு செய்த இயக்குநருக்கு நன்றி.
நடிகர் பஷீர் தேவராகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படம் பெரும் போராட்டத்துக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும். இந்தப் படமும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது.
முன்பு சாதி வேண்டாம் எனப் படம் எடுக்கப்பட்டது. ஆனால், கடைசி 10 ஆண்டுகளாக சாதி வேண்டும் எனப் படம் எடுக்கப்படுகிறது. இந்த சூழலில் சாதி வேண்டாம் என இந்தப் படம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மதத்தையும், சாதியையும் பேசுவது தேவரும் அல்ல. அவர் படமும் அல்ல என்பதை இந்தத் திரைப்படம் உணர்த்தும். தேவர் என அவர் பெயருக்குப் பின்னால் குறிப்பிடாமல் இருந்திருந்தால் அவர் உலகளவில் கொண்டாடப்பட்டிருப்பாரோ எனக் கருதுகிறேன்.
தேவர் சமூகங்கள் சேர்ந்து இந்தப் படத்தை எடுக்கவில்லை என்பது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்.கே. சுரேஷ், “இந்தப் படத்தை நானோ, எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ எடுத்திருந்தால் அது வேறுவிதமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும்.
தேவர் பிறந்த மண்ணில்தான் நானும் பிறந்தேன். அவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. பிற சமூக மக்களுக்குதான் நிறைய செய்திருக்கிறார்.
நான் தேவர் தொடர்பான ஒரு விழாவில் கலந்துகொண்டதற்காக சில மாதங்களாக திரைத்துறையைவிட்டு என்னை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
பெரும் இயக்குநர்களான ரஞ்சித், மாரி செல்வராஜ் என யார் அழைத்தாலும் அவர்களின் படத்தில் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். என்னையும், எங்கள் சமூகத்தையும் சாதியாக பார்க்காதீர்கள்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் பஷீர் தேவராகவே வழ்ந்து வருகிறார். அவரை 15 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால், அவரிடம் என்னால் இப்போது இயல்பாக இருக்கவே முடியவில்லை.
இந்தப் படத்தில் அதிகம் சர்ச்சைகள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். சாதிப்படத்தை பெருமையாகப் பேசுகிறோம் என்கிறார்கள்.

இல்லை, இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறோம் அவ்வளவுதான். ஏற்றத்தாழ்வு கூடாது எனப் பேசியவர் தேவர்.
முக்குலத்தோர் என மீசையை மட்டும் முறுக்கினால் மட்டும் போதுமா… எவ்வளவுப்பேர் கோடிஸ்வராராக இருக்கிறீர்கள். 500, 1000 கோடியில் இதுபோன்ற படம் முன்பே எடுத்திருக்க வேண்டுமல்லவா? குறைந்தபட்சம் இவர்களுடனாவது நின்றிருக்க வேண்டும். எல்லா சமூக மக்களும் அவரவர்களின் தலைவர் குறித்த படங்களை எடுக்க வேண்டும்.” என்றார்.