
திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் சாலையோரப் பகுதியில் பல கல்வி நிறுவனங்கள் நோக்கி தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அந்த வழித்தடத்தில் பயணம் செய்கிறார்கள்.
தற்போது இச்சாலையின் ஒரு பகுதியில் கால்வாய்ப் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் நகரின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்றாலும், பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு இல்லாத சாலை – அபாயம்
அந்தப் பகுதியில் தற்போது திறந்த கால்வாய் தோண்டப்பட்டதன் காரணமாக மழை பெய்தவுடன் அந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியைக் கடக்கும்போது வழுக்கி விழும் அபாயம் உள்ளது.
தேங்கிய மழை நீரை அவ்வப்போது வெளியேற்றினாலும் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும்போது, அந்தத் திறந்த குழிகள் அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம்.
இந்த நிலை வெறும் சிரமம் மட்டுமல்ல ஒரு சிறிய கவனக்குறைவால் பெரிய விபத்துக்கும் வழிவகுக்கும்!
“பாதுகாப்பு வேலி” – ஒரு சிறிய தீர்வு
பெரிய பாதுகாப்பு! இந்தப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு ஒன்றே அது, கால்வாய் நடைபெறும் இடங்களில் குறைந்தபட்சம் தற்காலிக வேலிகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் அமைத்தால் கூட, மக்கள் அந்த இடங்களைத் தவிர்த்துச் செல்வார்கள்.
இது சிறிய நடவடிக்கை என்றாலும், அது பலரின் உயிரைக் காப்பாற்றும் அளவுக்கு முக்கியமானது. அத்துடன் பணிகளை முடித்தவுடன், சாலையும் சீரமைக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் குரல்:
இது குறித்து அப்பகுதியில் செல்லும் மாணவர்களிடம் கேட்டறிந்தபோது அவர்கள்,
“இதெல்லாம் எங்களுக்குப் பழகிப் போச்சு! கால்வாய் பணி இப்பதான் ஆரம்பித்திருந்தாலும் இந்த ரோடு மற்ற நேரத்திலும் மழை நேரத்திலும் இப்படித்தான் இருக்கும்.
தினமும் இந்த சாக்கடை நாற்றத்தையும், குழிப்பள்ளத்தையும் தாண்டிதான் ஸ்கூல், காலேஜுக்குப் போக வேண்டி இருக்கு!” என்றனர்.

மக்களின் கோரிக்கை:
நகர வளர்ச்சி முக்கியம் தான், ஆனால் எங்களின் பாதுகாப்பு அதைவிட முக்கியம். எனவே, கால்வாய் பணிகள் விரைவில் முடிவடைய வேண்டியது அவசியம்.
அதேசமயம், பணிகள் நடைபெறும் இடங்களில் உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும். இது ஒரு கோரிக்கை அல்ல, ஒரு அவசரம் மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல்முறை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.