
ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது ‘தேசியத் தலைவர்’ திரைப்படம்.
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை கௌதமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்குநர் பேரரசு, ஆர்.பி.உதயகுமார், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் சங்கத் தலைவரும், இயக்குநருமான ஆர்.பி.உதயகுமார் உரையாற்றினார்.
அப்போது, “இந்தப் படத்துக்காக தமிழ்நாடு இயக்குநர் சங்கம் பெருமை கொள்கிறது. இந்தப் படத்தை இயக்குவதற்கு முழுத் தகுதியும் உள்ள இயக்குநர் அரவிந்த். எனக்கு முதன்முதலில் புது பேண்ட் வாங்கிக் கொடுத்தவர். மிகப்பெரும் கஷ்டத்துக்குப் பிறகு இந்தப் படம் எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் தேவராக நடித்திருக்கும் பஷீர், படம் தொடங்கியதிலிருந்து புலால் உண்ணுவதை நிறுத்திவிட்டார். அவ்வளவு உளப்பூர்வமாக நடித்திருக்கிறார். கரணம் தப்பினால் மரணம் என்ற மாதிரியான படம் இது.
தேவர், சாதித் தலைவரே இல்லை. அவர் தேசியத் தலைவர். 3 வருடமாக இந்தப் படம் எடுத்திருக்கிறார்கள். தேவரின் வரலாறு மறைக்கப்பட்டதற்கு சுபாஷ் சந்திரபோஸுடன் இந்திய சுதந்திரத்துக்கு மாற்றுவழியை யோசித்தது கூட காரணமாக இருக்கலாம்.” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, “தேவர் சாதித் தலைவர்தான். மனித சாதித் தலைவர். எல்லா சாதிகளின் தலைவர். அப்படித்தான் வாழ்ந்தார்.
தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன், சங்கிலி முருகன், நடிகை கௌதமியைத் தவிர வேறு யாரும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு சாதிப் படம் என்றால், அந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்த சாதியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார்கள்.
ஆனால், தேவர் மகன் படத்திலும், இந்தப் படத்திலும் அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பகுதி இல்லை. அப்படியென்றால், தேவர் மீது எல்லோருக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்றுதானே பொருள்.

எனவே தேவரை சாதித் தலைவராக முன்னிறுத்த முடியாது. தேசமும் தெய்வீகமும் ஒன்று எனச் சொன்னவர் தேவர். தமிழ்நாட்டுக்கு இன்றைய காலத்துக்கும் மிகவும் தேவையான தலைவர் தேவர்.
தமிழ்நாட்டிலிருந்துதான் இந்தியாவுக்கு எதிராக அதிகம் குரல் எழுகிறது. இந்தியா வேறு, தமிழ்நாடு வேறு எனக் கருதுகிறார்கள்.
தேவரைக் கொண்டாட வேண்டிய சமூகம் பட்டியலின மக்கள்தான். அவர் சொத்துகளைக் பட்டியலின மக்களுக்குதான் கொடுத்திருக்கிறார். பெண்களை மதிக்கக்கூடியவர். அரசியலுக்கு வர விரும்புபவர்கள் தேவரை படிக்க வேண்டும்.” என உரையாற்றினார்.