
ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2022-ல் வெளியாகி சுமார் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்த `காந்தாரா’ திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட சினிமா பக்கம் திருப்பியது.
அதன் அடுத்த பாகமாக, இந்த மாத தொடக்கத்தில் வெளியான `காந்தார சாப்டர் 1′ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனில் முதல் பாகத்தை ஓவர்டேக் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விமர்சன ரீதியாகவும் தென்னிந்தியா முதல் பாலிவுட் வரை பல்வேறு இயக்குநர்கள், நடிகர்கள் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
படத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கும் விதம் பற்றி பலரும் வியந்து பாராட்டுகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் இயக்குநர் அட்லி இப்படத்தைப் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டியைப் பாராட்டியிருக்கிறார்.
பெங்களூருவில் இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படம் வெளியானபோது நான் ஆம்ஸ்டர்டாமில் (நெதர்லாந்து தலைநகர்) இருந்தேன்.
அங்கு இரண்டரை மணிநேரம் பயணம் செய்து தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன்.

பார்த்துவிட்டு உடனடியாக போன் செய்தேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர்மீது ரொம்ப மரியாதை இருக்கிறது.
எல்லா இயக்குநர்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் அவர். கிட்டத்தட்ட சாத்தியமில்லாததை அவர் செய்திருக்கிறார்.
இது கடினம் என்று ஒரு இயக்குநராக என்னால் கூற முடியும். ஆனால், இதில் அவர் ஹீரோவும் கூட.
உண்மையில் அவர் தேசிய விருது வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். படத்தில் அவர் கொண்டுவந்திருப்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது” என்று அட்லி கூறினார்.