
பூட்டான் நாட்டில் இருந்து கடத்திக்கொண்டுவரப்பட்ட கார்களை வாங்கிய விவகாரத்தில் மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோரது வீடுகளில் இ.டி ரெய்டு நடத்தியது. இந்த நிலையில் கேரளம் முழுவதும் கலந்துகொண்டு விவாதம் என்ற பெயரில் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்வை நடத்திவரும் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி பாலக்காடு மாவட்டம் மலம்புழாவில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது சபரிமலை கோயில் துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்களில் நடந்துள்ள மோசடி குறித்தும், நடிகர்கள் வீட்டில் இ.டி ரெய்டு நடத்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய சுரேஷ்கோபி, “சபரிமலை தங்கம் மோசடி விவகாரத்தை மறைப்பதற்காக இரண்டு நடிகர்களை தராசில் வைத்து அளவிடுவதற்கு கேரள மக்களிடம் விட்டுள்ளார்கள். என்.ஐ.ஏ, இ.டி ஆகியவை ரெய்டு நடத்துவதுடன், விசாரணை நடத்துகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்துகொண்டு நான் அதிகமாக எதுவும் கூறவிரும்பவில்லை.”
ஆனாலும், கேரள அரசை பாதிக்கும் விஷயங்கள் வரும்போது மக்களிடம் பிரபலமானவர்களை களங்கப்படுத்த போலீசை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இன்னும் இதுபோன்று நடக்கும். சபரிமலை தங்க கவசங்கள் திருடப்பட்ட விவகாரத்தை மறைப்பதற்காக இதுபோன்று செய்கிறார்கள். ஒரு அரசியலுக்கும் உட்படாதவர் ஐயப்பன்.
சபரிமலையில் நடந்த விஷயத்துக்கு பெரிய தண்டனை பெறவேண்டியது வரும். சபரிமலை தங்கம் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் கேரளாவில் நடக்கப்போகின்றன.

ஐயப்பன் மனிதராகவும் உள்ளார். எனது மூத்த சகோதரராக ஐயப்பனைப் பார்க்கிறேன். இறைவனின் கணக்குப் புத்தகத்தில் மட்டுமே தவறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இ.டி நடிகர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கும் நிலையில், கேரள சி.பி.எம் அரசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் சபரிமலை தங்கக் கவசம் திருட்டு சம்பந்தமான விவகாரத்தை மறைப்பதற்காக நடிகர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதாக சுரேஷ்கோபி கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.