
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழாவை உ.பி. அரசு சார்பில் அயோத்தியின் ராம் மனோகர் லோகியா அவத்
பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதில், 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முலம் கடந்த ஆண்டின் (26 லட்சம் அகல் விளக்குகள்) சாதனை முறியடிக்கப்பட உள்ளது. இவ்விளக்குகள் சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்கள் மற்றும் குடியிருப்புகளில் ஒளிர உள்ளன. தீபாவளிக்கு தமிழகத்தில் நரகாசுரன் காரணமானதைப் போல், உ.பி.யில் ராமர் போருக்குப் பின் அயோத்தி திரும்பியதன்
நினைவாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் 1,100 டிரோன்கள் வானில் தீபாவளிக்காக பறக்கவிடப்பட உள்ளன. இவற்றில் ராமாயணத்தின் காட்சிகள் ஒளிப்படங்களாக சித்தரிக்கப்பட உள்ளன.