
நேற்று (அக்டோபர் 10) உலக மனநல தினத்தை முன்னிட்டு, தன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டுள்ளதை அறிவித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
இதனை ஆழமான கௌரவமாக உணருவதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) செயலாளரான புன்ய சலிலா ஶ்ரீவஸ்தவா உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் தீபிகா படுகோனே.
தீபிகா படுகோனே என்ன சொல்கிறார்?
“உலக மனநல தினத்தன்று, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.
மேலும், “நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நமது நாட்டு பொது சுகாதாரத்தின் மையமாக மனநலத்தை வைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் தி லிவ் லவ் லாஃப் அறக்கட்டளையில் நாங்கள் மேற்கொண்ட எனது சொந்தப் பயணம் மற்றும் பணியின் மூலம், நாம் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்குவது எவ்வளவு சாத்தியம் என்பதைக் கண்டேன்.
இந்தியாவின் மனநல கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ஜே.பி. நட்டா மற்றும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் செயல்பட எதிர்நோக்கியிருக்கிறேன்.” என்றும் கூறியுள்ளார்.
தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே கடுமையான மன அழுத்தத்திலிருந்து மீள மனநல நிபுணரின் உதவியை நாடியது முதல் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இதற்காக லிவ் லவ் லாஃப் என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். தொடர்ந்து பத்தாண்டுகளாக மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தீபிகா படுகோனே, கடைசியாக ரோஹித் ஷெட்டி இயக்கிய சிங்கம் அகைன் படத்தில் தோன்றினார். அதில் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், கரீனா கபூர், மற்றும் அர்ஜுன் கபூர் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக ஷாருக் கானின் கிங் படத்தில் தோன்றவுள்ள தீபிகா, அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.