• October 11, 2025
  • NewsEditor
  • 0

டி.டி.கே நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், பிரபல தொழிலதிபருமான `இந்திய கிச்சன் கிங்’ டி.டி. ஜெகநாதன் (77) நேற்று (அக்டோபர் 10) பெங்களூரூவில் உயிரிழந்தார்.

இவரின் இழப்பு குறித்து டி.டி.கே குரூப், “அவரின் திடீர் மறைவு நிறுவனத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள், ஊழியர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.

TT Jagannathan – டி.டி.ஜெகநாதன்

யார் இந்த டி.டி. ஜெகநாதன்?

தனது தாத்தா டி.டி.கிருஷ்ணமாச்சாரியால் 1928-ல் ஆரம்பிக்கப்பட்டு, 1950-களில் தனது தந்தை நரசிம்மன் நிர்வாகத்தில் திவாலை நோக்கி சென்றுகொண்டிருந்த டி.டி.கே நிறுவனத்தின் பாதையை லாபத்தை நோக்கியும், இந்திய சமையலறைகளில் புரட்சியையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியவர் டி.டி. ஜெகநாதன்.

அதாவது டி.டி.கே நிறுவனம், தொடங்கப்பட்ட காலகட்டத்தில் பல பொருள்களைத் தென்னிந்தியா முழுவதும் விநியோகம் செய்து லாபகரமானதாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் நிறுவனர் கிருஷ்ணமாச்சாரிக்கு 1930 பிற்பகுதியில் அரசியல் ஆர்வம் தலைதூக்க, தனது மூத்த 17 வயது மகன் நரசிம்மனிடம் நிர்வாகப் பொறுப்பு வந்தது.

1940-கள் தொடக்கத்தில் லீவர் நிறுவனம் தனது பொருள்களை விநியோகம் செய்ய இடைத்தரகர்கள் வேண்டாம் என்று கூறவே அதுவரை அதன் பொருள்களை விற்பனை செய்துவந்த டி.டி.கே நிறுவனம் இறங்குமுகத்தில் சென்றது.

பின்னர், 1946-வாக்கில் அமெரிக்காவின் ஹென்றி ஷெமூர் அண்ட் வி.ஏ.டாட்ஜ் நிறுவனத்தின் பொருள்களை விநியோகம் செய்யும் ஏஜெண்டாக டி.டி.கே நிறுவனம் மாற நிலைமை கொஞ்சம் சீரானது.

சுதந்திரத்துக்குப் பின் நேரு அமைச்சரவையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக கிருஷ்ணமாச்சாரி பதவி வகித்தபோது, 1952-ல் பொருள்களின் இறக்குமதி தடைசெய்யப்படவே, டி.டி.கே நிறுவனம் விநியோகம் செய்துவந்த பொருள்களின் விநியோகம் பாதித்தது.

TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்
TT Jagannathan – டி.டி.ஜெகநாதன்

கிருஷ்ணமாச்சாரி தொழில்துறை அமைச்சராக இருந்ததாலே நரசிம்மனால் பிசினஸ் தொடர்பாகச் செல்ல முடியாமல் போனது. 1958-க்குப் பிறகு இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்த பொருள்களை உற்பத்தி செய்ய முடிவெடுத்தார்.

பால்பாயின்ட் பேனா, மேப், அட்லாஸ் உட்பட ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கியது டி.டி.கே குரூப் நிறுவனம். ஆனால், உற்பத்திச் செலவால் கடன் சுமையும் அதிகரித்தது.

அப்போது, சென்னை ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் கோல்டு மெடல் வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நரசிம்மனின் மகன் டி.டி. ஜெகநாதன், உடனடியாக சென்னை வந்து தந்தைக்கு உதவும் வகையில் நிர்வாகப் பொறுப்பில் ஈடுபட்டார்.

இந்த இடத்தில்தான் மேற்குறிப்பிட்டவாறு நிறுவனத்திலும், இந்திய சமையலறைகளிலும் புரட்சி செய்தார் டி.டி.கே ஜெகநாதன். 1959-ல் ‘ப்ரஸ்டீஜ் ப்ரஷர் குக்கரை’ அறிமுகப்படுத்துகிறார் டி.டி.கே ஜெகநாதன்.

இன்று குக்கரில் சாதம், காய்கறிகள் போன்றவை போட்டுவிட்டு விசிலடிக்கும் வேளையில் பார்த்துக்கொள்ளலாம் என ஆசுவாசம் தரும் இந்த குக்கர், அன்றைய காலகட்டத்தில் குடும்பப் பெண்களுக்கு எத்தகைய நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

டி.டி.கே ப்ரஸ்டீஜ் நிறுவனத்தின் பேரில் வீட்டுக்கும், சமையல்கட்டுக்கும் தேவைப்படும் வகையில் சுமார் 600 பொருள்களை விற்பனை செய்து வருகிறது டி.டி.கே குரூப். இந்திய குடும்பங்களின் சமையலறைகள் ப்ரஸ்டீஜ் மயமாகின.

TT Jagannathan - டி.டி.ஜெகநாதன்
TT Jagannathan – டி.டி.ஜெகநாதன்

உள்நாட்டைத் தாண்டி உலக அளவில் நிறுவனம் விரிவடைந்தது. டி.டி.கே ப்ரஸ்டீஜ் நிறுவனத்தில் 1975 முதல் 2000 வரை நிர்வாக இயக்குநராகவும், 2000 முதல் 2019 வரை எக்ஸிகியூட்டிவ் சேர்மனாகவும் (Executive Chairman), 2019 முதல் 2025 மார்ச் வரையில் நான்-எக்ஸிகியூட்டிவ் சேர்மனாகவும் (Non Executive Chairman) செயல்பட்டு நிறுவனத்தை வானுயரத்துக்கு கொண்டு சென்றார்.

டி.டி.கே நிறுவனத்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் சந்த்யா மெண்டோன்காவும் இணைந்து `டிஸ்ரப்ட் அண்ட் கான்குயர் (Disrupt & Conquer – How TTK Prestige Became a Billion Dollar Company)’ என்ற பெயரில் நிறுவனம் கடந்து வந்த பாதைகளைப் புத்தகமாக வடித்திருக்கிறார் டி.டி.ஜெகநாதனும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *