• October 11, 2025
  • NewsEditor
  • 0

பொதுக்கழிவறைகள் என்றாலே அதில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தினால், சிறுநீர்ப்பாதைத் தொற்று கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்பதுதான் நம் எல்லோருடைய எண்ணமும். அது உண்மையும்கூட.

அதே நேரம், இப்போது சிலர் டாய்லெட் சீட் மேல் அதற்கென தயாரிக்கப்படுகிற சானிட்டைசரை ஸ்பிரே செய்துவிட்டு பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் மலர்விழி அவர்களிடம் பேசினோம்.

பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தினால் சிறுநீர்ப்பாதைத் தொற்று வருமா?

பலரும் கழிப்பறைகளால் பரவும் என நம்பிக்கொண்டிருக்கும் சிறுநீர்ப் பாதைத் தொற்று (urinary tract infection or UTI) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

E.coli, Staphylococcus, Streptococcus போன்ற பாக்டீரியாக்கள் நம் சிறுநீர்ப்பாதைக்குள் நுழையும்போது ஏற்படுவதுதான் சிறுநீர்ப் பாதைத் தொற்று.

அங்கிருந்து சிறுநீர்ப்பையைத் தாக்கி, அதிலிருந்து சிறுநீரகம் வரைக் கூட பரவ வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இந்த நோய் தொற்றிக்கொள்வது சுலபம்.

ஏனெனில் அவர்களின் சிறுநீர்க் குழாய் ஆண்களை விடச் சிறியது, மற்றும் ஆசனவாய் அருகில் உள்ளது. இதனால் கிருமிகள் ஊடுருவும் வாய்ப்பும் அதிகம்.

ஆனால், இந்த பாக்டீரியாக்கள் பற்றி நாம் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு கழிப்பறை இருக்கையின் மீது இருப்பதைவிட, நம் உடலுக்குள்ளேதான் இவை அதிகம் வாழ்கின்றன. ஆம்! நமது மலத்தில்தான் இந்த பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன.

நாம் நம்மை சரியாக சுத்தம் செய்துகொள்ளாத நிலையில் நமது மலம் நம் சிறுநீர்க்குழாய்க்குள் செல்ல வாய்ப்புண்டு. இப்படி பலமுறை நடந்து, சற்று நேரத்திற்கு மலம் அங்கேயே இருந்தால்தான் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

டாக்டர் மலர்விழி
டாக்டர் மலர்விழி

அது இல்லாமல் மற்றொரு காரணம் என்னவென்றால், நாம் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருந்தாலும் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

நம் உடலுக்குள் வரும் கிருமிகள் மலம், சிறுநீர் போன்ற கழிவுகள் மூலமாகவும், மூச்சுக்காற்று மூலமாகவும் தான் வெளியேற்றப்படுகின்றன.

இதை சிறுநீர்ப் பாதையில் நீண்ட நேரம் அடக்கி வைத்தால் ஆபத்து. நேரத்திற்கு கழிவறைக்குச் சென்று, சுத்தமாகப் பராமரித்துக் கொண்டால், அச்சம் தேவையில்லை.

இப்போது பொதுக் கழிவறைகளுக்கு வருவோம். ஆம், கிருமிகள் அக்கழிவறைகளில் இருக்கின்றனதான். ஆனால், நாம் அதை உபயோகிக்கும் சில நொடிகளில் அவற்றால் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது. ஏன், பல கிருமிகளால் மனிதருடைய உடலை விட்டு வெளியே வந்துவிட்டால் பிழைக்கக்கூட முடியாது.

கோட்பாட்டளவில் கழிப்பறை இருக்கையில் இருந்து பரவக்கூடிய நோய்களின் சதவீதம் மிக மிகக் குறைவு. ஒருவேளை சிறுநீர்ப் பாதைத் தொற்று இருக்கும் ஒருவரின் சிறுநீர் அந்தக் கழிவறை இருக்கையில் மீதம் இருக்கும் பட்சத்தில் வாய்ப்புண்டு.

இப்போது சானிட்டைசர் ஸ்பிரே பற்றி சொல்கிறேன். இந்த ஸ்பிரேவில் இருப்பது, ஐசோபுராப்பைல் ஆல்கஹால் (isopropyl alcohol or IPA). இது அறிவியல் படித்தவர்களுக்கு பரிச்சயமான பெயராகும்.

ஏனெனில் ஆய்வகங்களில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கொல்வதற்கு (sterilization) பயன்படுத்தப்படும் பொருள் இதுவே. இதில் வாசனைப் பொருட்களை சேர்த்து, ஸ்பிரே பாட்டிலில் அடைத்து மக்களிடம் விற்பனை செய்கிறார்கள்.

இந்த ஸ்பிரேவை பயன்படுத்துவதால் பயனே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், கழிவறை இருக்கைகளை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்தாலே போதும்.

இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுக் கழிவறைகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். கழிவறைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். தனி மனிதர்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மறந்தால், நாடும் குப்பை மேடு தான்” என்கிறார் டாக்டர் மலர்விழி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *