
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
ஒரு முறையாவது புரட்டாசி சனிக்கிழமை ஏழுமலையானை தரிசித்து விட வேண்டும் என்ற ஆசையில் நானும் என் நண்பனும் கிளம்பிச் சென்று பட்ட அவஸ்தை வாழ்நாளில் மறக்க முடியாதது.
கல்லூரி மாணவர்களாக இருந்த போது, நானும் என் நண்பனும் வருடம் ஒரு முறையாவது திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தோம். அவனுக்கு சொந்த ஊர் வேலூர் என்பதால் இது நினைத்த மாத்திரத்தில் செய்யக் கூடிய வேலையாக இருந்தது. விடுமுறை நாட்களில் அவன் ஊருக்கு செல்லும் போது நானும் அவனுடன் போய் விடுவேன்.
வாரத்தின் மத்திய பகுதியில் (அப்போது தான் அதிக கூட்டம் இல்லாமல் இருக்கும் என்பதால்) ஒரு நாள் அதிகாலை இரு சக்கர வாகனத்தில் கிளம்புவோம். கீழ் திருப்பதியில் காலை உணவை முடித்துக் கொண்டு மலை ஏறினால், ஒன்பது அல்லது பத்து மணிக்குள் தர்ம தரிசன வரிசையில் நின்று விடலாம்.
அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குள் சாமி தரிசனம் முடித்து வெளியே வந்து விடலாம். மதிய உணவை அன்னதானக் கூடத்தில் முடித்துக் கொண்டு புறப்பட்டால் மாலைக்குள் வீடு வந்து சேர்ந்து விடலாம். திருப்பதி தரிசனத்தைப் பொறுத்த வரையில் இது தான் எங்கள் வழக்கமான நடைமுறை.
திடீரென்று எங்கள் இருவருக்கும் ஒரு விபரீத ஆசை தோன்றியது. வாழ்நாளில் ஒரு முறையாவது புரட்டாசி சனிக்கிழமை ஏழுமலையானை தரிசித்து விட வேண்டும் என்பது தான் அது. ‘புரட்டாசி மாதம், இந்த விஷப்பரீட்சை வேண்டாம்’ என்றார் நண்பனின் அம்மா. ‘சாமியைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டார்கள். நாம் ஏன் தடுக்க வேண்டும்? எல்லாம் சாமி பாத்துக்குவார். போயிட்டு வரட்டும்’. இது நண்பனின் அப்பா. அவர் ஒரு யதார்த்தவாதி.
எழுபதுகளின் பிற்பகுதி. ஆன்லைன் பதிவுகள் இல்லாத கால கட்டம். இளவயது தந்த அசட்டு தைரியம். கிளம்பி விட்டோம். வழக்கம் போல் அதிகாலையிலேயே வேலூரிலிருந்து கிளம்பினோம். திருமலை சென்று சேரும் போது காலை மணி ஒன்பது. பெருமாளை பார்த்து விட்டுத் தான் சாப்பிட வேண்டும் என்று விரதம் வைத்துக் கொண்டோம்.

கையில் அதிகம் பணப்புழக்கம் இல்லாத நேரம். அதனால் தர்ம தரிசனம் தான் ஒரே வழி. வரிசையில் நின்றோம். கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. இதெல்லாம் நாங்கள் எதிர்பார்த்தது தான். இப்போது மாதிரி அப்போது காத்திருப்பு மண்டபங்கள் கிடையாது.
நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். வரிசையின் ஒரு ஓரமாக சிமெண்ட் பெஞ்ச் மாதிரி கட்டி இருப்பார்கள். வயதானவர்கள் கால் வலித்தால் அமர்ந்து கொள்ள. வழியில் உணவுப் பொருட்களோ, பானங்களோ விநியோகம் கிடையாது. தண்ணீர் மட்டும் இருக்கும்.
கிளம்பும் போது எங்கள் மனதில் ஒரு கணக்கு இருந்தது. ‘வழக்கமாக நாலு மணி நேரம் ஆகும். இன்று ஏழு அல்லது எட்டு மணி நேரம் ஆகலாம்’ என்று. அதற்கு தயாராகத் தான் நாங்களும் வந்திருந்தோம். ஆனால் நாங்கள் போட்டது தப்புக்கணக்கு என்பது அப்போது எங்களுக்குப் புரியவில்லை. வரிசை நத்தை வேகத்தில் நகர்ந்தது.
இடையிடையே நகராமல் ஒரு மணி நேரம் அப்படியே நின்றது. அதற்கான காரணம் எங்களுக்கு விளங்கவில்லை. விசாரித்த போது ‘சிறப்பு பூஜை செய்பவர்களுக்கான நேரம். அந்த நேரத்தில் வரிசையில் நிற்பவர்களை அனுமதிக்க மாட்டார்கள்’ என்று விபரம் தெரிந்தவர்கள் கூறினார்கள்.
நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. மாலையும் நெருங்கி விட்டது. ஆனால் நாங்கள் சன்னதியை நெருங்கிய பாடில்லை. நின்று, நின்று கால்களில் வலி. சாப்பிடவும் இல்லை.’வீட்டில் தேடுவார்களே. திரும்பிப் போய் விடலாமா’ என்று தோன்றியது. ‘முக்கால் வாசி தூரம் கடந்து விட்டோம். இன்னும் கொஞ்ச தூரம் தானே. சாமியை பார்த்துவிட்டு போய் விடலாம்’ என்றான் நண்பன். திரும்பிச் செல்ல மனம் மறுத்தது.
ஆசை யாரை விட்டது?. நினைத்த மாத்திரத்தில் வீட்டிற்குத் தகவல் சொல்லும் வசதி அப்போது இல்லை. பாதி வரிசையிலிருந்து வெளியே வரவும் வழி தெரியவில்லை. பயம் பாதி. பசியினால் சோர்வு பாதி. ‘என்ன ஆனாலும் சரி. சாமி பார்க்காமல் திரும்புவதில்லை’. என்னை விட நண்பன் மிகவும் உறுதியாக இருந்தான்.
இரவு ஒன்பது மணி சுமார், முன்வாசல் கோபுரத்திற்கு அருகில் நெருங்கி வந்து விட்டோம். ‘அப்பாடா, இன்னும் கொஞ்ச நேரத்தில் சாமியைப் பார்த்து விடலாம்’ என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் வரிசை நகர்வது மீண்டும் நின்றது. அவ்வளவு தான். மூன்று மணி நேரமாக வரிசை நகரவே இல்லை. சோர்வு, பசிமயக்கம், வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து வயிற்றில் என்னவோ செய்தது.

நடுநிசி நெருங்கி கொண்டிருந்தது. அதாவது சனிக்கிழமை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எந்த நோக்கத்திற்காக திருப்பதி வந்தோமோ, அது நிறைவேறுமா என்ற எண்ணம் தோன்றி விட்டது. ‘ஏழுமலையானே, இது என்ன சோதனை? புரட்டாசி மாதம் சனிக்கிழமை உன்னை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டது தவறா? அதற்கு எங்களுக்கு கொடுப்பினை இல்லையா?’ கிட்டத்தட்ட பாலாஜியை திட்டாத குறை தான்.
மணி இரவு 11 .50 . திடீரென்று வரிசை திறந்து விடப்பட்டது. பக்தர்கள் செல்லும் வழி அகலம் ஆக்கப்பட்டது. கூட்டம் மொத்தமும் முண்டியடித்து, ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கத்திக் கொண்டே, கோபுரத்திற்குள் நுழைந்து சன்னதியை நோக்கி ஓடியது. சன்னதியை நெருங்கும் போது மீண்டும் வரிசை. இன்னும் பத்தே நிமிடங்கள். இப்போது வரிசை வேகமாக நகர்கிறது. இருந்தாலும் சன்னதிக்குள் நுழைந்து சாமியின் முகத்தை பார்க்க முடியவில்லை. வேகமாக முன்னேறிச் செல்கிறோம். சன்னதியை நெருங்கி விட்டோம்.
உள்ளே நுழைந்தால்….சன்னதிக்குள்ளேயே ஒரு மடக்கு வரிசை. சாமி இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வரிசை நகர்ந்து கொண்டிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் சாமி தெரியும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. பின்னால் இருந்து மக்கள் கூட்டம் வெறித்தனமாக எங்களை முன்னே நெட்டித் தள்ளியது. கொஞ்சம் நிலை தடுமாறி கீழே விழுந்தால் கூட கூட்டம் மேலே ஏறிப் போய்விடும் போல் தோன்றியது.
எனவே கூட்டம் செலுத்தும் வழியில் முன்னேறிக் கொண்டிருந்தோம். நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் வரிசை நகரும் வேகம் அதை விட குறைவாக இருப்பது போல் மனதுக்கு தோன்றுகிறது. இன்னும் ஒரு சில மணித்துளிகளே மிச்சமிருந்தன. மனசு படபடவென்று அடித்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட ஒரு திகில் படம் பார்க்கிற உணர்வு.
நள்ளிரவு மணி 11 .59 . வரிசை, சாமி இருக்கும் திசை நோக்கித் திரும்ப, பெருமாளின் முகம் தரிசனம் ஆனது. நண்பன் உணர்ச்சிப் பெருக்கில் ‘கோவிந்தா’ என்றான். நானும் தான்.
தரிசனம் முடிந்து வெளியே வந்தோம். கொஞ்சம் ஓய்வு வேண்டும் என்று கால்கள் கெஞ்சின. கொஞ்ச நேரம் உட்கார்ந்தோம். ‘ரொம்ப நன்றி ஏழுமலையானே! சோதித்தாலும் கடைசியில் எங்களுக்கு சனிக்கிழமை தரிசனம் கொடுத்து விட்டாய். இனி இது போன்ற விபரீத ஆசை எல்லாம் எங்களுக்கு வராது’ என்று கோபுரத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு நடந்தோம். மிகவும் சோர்வாக இருந்தாலும் சாப்பிடக் கூட தோன்றவில்லை. உடனே வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி நின்றது. ஒரு டீயை மட்டும் குடித்து விட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
புரட்டாசி மாதமாக இருந்தாலும் மலையில் நல்ல குளிர். அதையும் பொருட்படுத்தாமல் கிளம்பி விட்டோம். வீட்டை அடைந்த போது விடியற்காலை நான்கு மணி. மெதுவாக கதவை தட்டினோம். அக்கா தான் வந்து கதவை திறந்தார்கள். “எங்கேடா போனீங்க? ஏன் இவ்வளவு லேட்? ரொம்ப நேரம் உங்களை எதிர்பார்த்து இருந்து விட்டு, இப்ப தான் அம்மா போய் படுத்தாங்க. சாப்டீங்களா?” என்று கேட்ட அக்காவிடம் “சாப்பிட்டோம்” என்று பொய் சொல்லி விட்டு, போய் படுத்து விட்டோம். அடித்துப் போட்ட மாதிரி தூங்கினோம்.
மறுநாள் எழுந்த போது நண்பகல். வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடியது ரேடியோ அல்ல.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.