
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
இன்று காலை கிச்சனில் எனது சிற்றுண்டியை முடித்துவிட்டு, இரண்டாவது தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனைச் சேர்ந்த சக ஊழியன் ஜோஷ்வா வந்தான்.
முகமன்களைத் தெரிவித்தபடி தான் கொண்டு வந்த தடித்த, வழவழப்பான, வெண்மார்பில் நிற காகிதப் பையிலிருந்த பால் பவுடர் போத்தலை எடுத்தான். அது பிளாஸ்டிக் போத்தல் என்பதால் மாவெல்லாம் கணிசமாகத் தீர்ந்து அடியில் பாதி சுண்டுவிரளவு மட்டும் மீந்துக் கிடந்ததைக் காண முடிந்தது.. அதிலிருந்து ஓரிரு தேக்கரண்டிகள் கவனத்துடன் அளவெடுத்து வெந்நீரில் சேர்க்கத் தொடங்கினான்.
எங்களைப் பற்றிய சிறு அறிமுகம் என்றால்… நாங்கள் இருவரும் அமீரகத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறோம். ஆடு, மாடு, ஒட்டங்கள், குதிரைகளுக்கான ரோடெஸ் (Rhodes) மற்றும் அல்ஃபல்ஃபா (alfalfa) போன்ற புல் வகைகளை விளைவிக்கும், மற்ற மற்ற நாடுகளிருந்து தருவித்து விற்கும் நிறுவனமது.
நாங்கள் இருவரும் அவரவர் வேலைத்தகுதிக்கேற்ப தனித்தனி அறைகளில் தங்கி வந்தாலும், சற்று விசாலமான இந்த சமையலறையும் சாப்பாட்டுக் கூடமும் எல்லோருக்கும் பொதுவானதுதான். இதன்மூலம் பசிக்கும், பசியாறுதலுக்கும் முன்பு அனைவரும் சமம் என்று தத்துவார்த்தமாக சொல்ல வருகிறார்களோ என்னவோ!
நான் சூப்பர்வைசர் என்பதாலும், அவன் சாதாரண ட்ராக்டர் டிரைவர் என்பதாலும் அவன் உடல் நலிந்ததுப் போன்ற தோற்றத்தையும், போதிய வருமானமில்லாததின் அல்லல்களையும் உடல்மொழிகளில் கண்டுணர்ந்து, அக்கணம் அவன் மீது பரிவு, சுனைநீர் போல் மேலோங்கியது.
போதியும் போதாத பால் பவுடரை அவன் வெந்நீரில் கலந்து குடிக்கும் நிலையை உள்வாங்கியபோது உணவிற்காகவும், தங்களின் பிற அடிப்படைத் தேவைகளுக்காகவும் மற்ற மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் குறிப்பிட்ட மக்களின் அவலநிலையை செய்தி ஊடகங்கள் பதிவுசெய்த காட்சிகள் உள்ளுக்குள் மறுஒளிபரப்பாவது போல் என்னையறியாமல் சில நொடிகள் மனதை வதைத்தன. ஏந்தும் கரங்களையும் அவர்கள் கண்ணீர் பேசும் வலியையும்தான் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடிகிறதா என்ன?
சட்டென நினைவின் பிடியிலிருந்து மீண்டு வந்தவனாய் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். பால்பவுடரை வெந்நீரில் நன்றாக கலக்கிக் கொண்டிருந்தான்.
அச்சமயம் நான் உண்டாக்கி வைத்திருந்ததில் சிறிது டீ மட்டுமே எஞ்சியிருந்தது.
வேண்டுமா என்றுக் கேட்க யோசித்தும் கொண்டிருந்தேன்.
அவனும் என்னைப் போல் கவனித்துக் கொண்டிருந்திருப்பானோ என்னவோ! விறுவிறுவென தான் கொண்டு வந்த பையிலிருந்து பாதி தீர்ந்திருந்த பிரட் பாக்கெட் ஒன்றை எடுத்து நீட்டி,
“Have it sir!” என்றான் கனிவுடன்.
நான், “I Just ate my breakfast Joshwa!” என்றேன் அவனை வியந்தபடி!
“I see..! You were only sipping tea… that’s what I gave you.
Please, dont mistake me!” என்றான் புன்னகையோடு.
எதற்காக தப்பா நினைக்கணும்?
அவன் செயலை நினைத்துப் பூரித்தவனாய், I appreciate it! என்றேன்.
“Thank you!” என்றபடி பிரட் துண்டுகளை தான் தயாரித்து வைத்திருந்த பாலில் மெல்லத் தோய்த்து உட்கொள்ள ஆரம்பித்தான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.