• October 10, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வழியாக தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கிப்பட்டி மேம்பாலத்தில் எதிரே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ வேன் அதிவேகமாக தஞ்சாவூர் நோக்கி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் அரசு பேருந்து- வேன் விபத்து

விபத்து நடந்த பிறகு அலறல் சத்தம் கேட்டு பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். உடனடியாக போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் விபத்து நடந்த சம்பவ இடத்தில் வேனில் வந்த நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்திருந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் விபதது நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். செங்கிப்பட்டி மேம்பாலத்தில் ஒரு பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பேரிகார்டு அமைத்து ஒரு வழி பாதையாக மாற்றியிருந்தனர்.

உயிரிழந்தவர்கள்

வெளியூரில் இருந்து வந்த வேன் டிரைவர் இதை அறியாமல் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிரே பேருந்து வந்ததால் நிலைதடுமாறி பேருந்து மீது மோதி விட்டதாக சொல்கிறார்கள். வேனில் சுமார் 11 பேர் இருந்துள்ளனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். வேனில் வந்த ஆறு பேர், பேருந்தில் வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் வந்தவர்கள் நாகை வேளாங்கண்ணிக்கு வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. விபத்து குறித்து கர்நாடகாவில் உள்ள உறவினர்களுக்கு சொல்லப்பட்டது அவர்கள் கதறி அழுதுள்ளனர்.

விசாரணையில் ஜான் போஸ்கோ, ஆரோக்கியதாஸ், நளினி, செல்சியா, வேன் ஓட்டுநர் ஜெகதீசன் ஆகியோர் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருவர் அண்ணன், தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *