• October 10, 2025
  • NewsEditor
  • 0

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கட்டுகுடி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதை திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பழனியப்பன் கண்டறிந்தார்.

இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, கட்டுகுடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சசிக்குமார் உதவியுடன் கைக்கோளர் ஊரணியின் வடமேற்கில் இரண்டாக உடைந்த ஒரு கல் தூணில் இருந்த கல்வெட்டை மீட்டு ஆய்வு செய்தார்.

368 ஆண்டு பழமையான கல்வெட்டு

இந்த ஆய்வு குறித்து ராஜகுரு கூறுகையில், ”66 இஞ்ச் நீளமும், 14 இஞ்ச் அகலமும் கொண்ட கல் தூணின் மேற்பகுதியில் திரிசூலமும், அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டும் உள்ளன.

இதில், சக ஆண்டு 1579, தமிழ் ஆண்டு யேவிளம்பி, சித்திரை மாதத்தில் சுக்கிரவாரமும், புணர்பூசமும், சுக்லபட்சத்து சத்தமியும் பெற்ற புண்ணிய காலத்தில், ரெகுநாதத் திருமலைச் சேதுபதி காத்த தேவருக்குப் புண்ணியமாக, திருவாடானை, ஆடானை நாயகர் கோயில் திருநந்தவனத்துக்காக கட்டுகுடியில் விரைப்பாடாக 50 கலம் மன்னரால் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பது தெரியவந்தது.

குறிப்பிட்ட அளவு தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவினை விரைப்பாடு என்பர். இதில் 50 கலம் தானியங்களை விதைப்பதற்குத் தேவைப்படும் நில அளவு நந்தவனத்துக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கல்வெட்டினை ஆய்வு செய்த ராஜகுரு

தானத்தை சந்திர சூரியன் இருக்கும் வரைக்கும் அனுபவித்துக் கொள்ள மன்னர் கட்டளையிட்டுள்ளார். இந்தப் புண்ணியத்துக்கு அழிவு பண்ணியவன் கெங்கைக் கரையிலே, காராம் பசுவைக் கொன்ன பாவத்திலே போவானாகவும் என கல்வெட்டு எச்சரிக்கிறது.

இதில் கலம் என்பது ‘ள’ என்ற குறியீடாக உள்ளது. 50 கலம் முதலில் தமிழ் எண் மற்றும் குறியீடாகவும், பின்னர் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆங்கில ஆண்டு கி.பி.1657 ஆகும். கல்லில் சில இடங்களில் எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *