
நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வீர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹால். இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்தப் படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அதனால், இந்தப் படத்துக்கான வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் வீர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், “மத்திய திரைப்படச் சான்றளிப்பு வாரியத்தின் (CBFC) செப்டம்பர் 10-ம் தேதி எங்களின் ஹால் திரைப்படத்தைப் பார்த்தது. ஆனால், சான்றிதழ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே இதுகுறித்து ஆன்லைனில் தேடியபோது, எழுத்துப்பூர்வமாக எந்த விளக்கமும் இல்லாமல் மறு ஆய்வுக் குழுவுக்கு படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
அந்த மறு ஆய்வுக்குழு ஹால் திரைப்படத்தின் மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடும் காட்சி, கதாநாயகி தன் அடையாளத்தை மறைக்க முஸ்லிம் ஆடையை அணிந்துகொள்ளும் காட்சிகளை நீக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் பெயரை மறைக்க வேண்டும் எனவும், படத்துக்கு A சான்றிதழ் வழங்கவும் பரிந்துரைத்திருக்கிறது.
சென்சார் போர்டின் இந்த உத்தரவுகளை ரத்து செய்து, திரைப்படத்தைப் பார்த்து, அதன் உள்ளடக்கம் குறித்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
விரைவில் எங்கள் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், படத் தயாரிப்பாளர்களுக்கான சிரமங்களைக் குறைக்கும் வகையில், சென்சார் போர்டு முதலில் திரைக்கதையை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதன்பிறகு உருவாகும் படம், சான்றளிக்கப்பட்ட திரைக்கதைப் போலவே இருந்தால் அந்தப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த மனு குறித்து விளக்கம் பெற கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. அதனால், 14-ம் தேதி இந்த வழக்கு மறு விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.