
‘எனக்கில்ல… எனக்கில்ல…’ – இது திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் பிரபல வசனம். இது தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தான் சரியாக பொருந்தும்.
கிட்டத்தட்ட 9 மாதங்களாக, ஆசை ஆசையாய் அவர் எதிர்பார்த்துகொண்டிருந்த நோபல் அமைதி பரிசு அவரது கைகளுக்கு வந்து ‘இந்த ஆண்டு’ சேரவில்லை.
முதன்முதலாக…
ட்ரம்ப் தனது நோபல் பரிசு ஆசையை முதன்முதலாக வெளிப்படுத்தியது கடந்த பிப்ரவரி மாதத்தில்.
கடந்த பிப்ரவரி மாதம், வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் ட்ரம்பை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அப்போது தான் முதன்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘நான் நோபல் அமைதி பரிசுக்கு தகுதியானவன். ஆனால், எனக்கு தரமாட்டார்கள்’ என்ற பேச்சை எடுத்தார்.
அதன் பின், நோபல் பரிசு ஆசையை 15-க்கும் மேற்பட்ட இடங்களில், நேரங்களில், பற்பல டோன்களில் மாற்றி மாற்றி சொல்லிவிட்டார் ட்ரம்ப்.
அசிம் முனீருக்கு கிடைத்த விருந்து
கடந்த மே மாதம், இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, அமெரிக்கா சென்றிருந்தார் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர்.
அசிம் முனீரின் அந்தப் பயணம் ஆரம்பத்தில் அமெரிக்க அதிகாரிகள் உடனானதாக தான் இருந்தது. ஆனால், அப்போது ஒரு நிகழ்வில், ‘இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தியதற்காக ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர வேண்டும்’ என்று அசிம் முனீர் பேசினார்.
உடனே, ட்ரம்ப் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்து அனுப்பினார்.
பின்னர், செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்ரம்பை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைத்தார்.
பரிசு கொடுத்த நெதன்யாகு
கடந்த ஜூலை மாதம், அமெரிக்கா சென்றிருந்தார் நெதன்யாகு. அப்போது நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைத்த நகலை ட்ரம்பிற்கு பரிசாக வழங்கினார் நெதன்யாகு.
கடந்த ஜூலை மாதம், கம்போடியா – தாய்லாந்து இடையே போர் நடந்தது. அதை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பங்கு மிக முக்கியமானது.
இதனையடுத்து, கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார்.
இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே ட்ரம்பிற்கு அதிக சந்தோஷத்தை தந்தத்துடன், நோபல் பரிசு ஆசையை மேலும் தூண்டியது.

மிகவும் எதிர்பார்த்த பரிந்துரை…
ஆனால், ட்ரம்ப் மிகவும் எதிர்பார்த்த ஒரு பரிந்துரை மட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. அது தான் இந்திய பிரதமர் மோடியின் பரிந்துரை.
கடந்த மே மாதம் நடந்த இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலை ‘நான் தான்’ முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று தொடர்ந்து ஜெபித்து வருகிறார் ட்ரம்ப். ஆனால், அதை இன்று வரை… இந்த நொடி வரை இந்தியாவும், இந்திய பிரதமர் மோடியும் ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், நோபல் பரிசுக்கும் ட்ரம்பை பரிந்துரைக்கவில்லை மோடி. காரணம், மோடி ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தால், ட்ரம்ப் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தியதுபோல ஆகிவிடும். இதனால், இதை முற்றிலும் தவிர்த்துவிட்டார் மோடி.
‘நண்பன்… நண்பன்…’ என்று தான் பறைசாற்றி வந்த ஒருவர், தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கவில்லை என்பது ட்ரம்பிற்கு சற்று அதிருப்தி.
தேர்வு குழுவின் விமர்சனம்
நோபல் பரிசு பெறுபவர்களை ஐந்து பேர் கொண்டு குழு தேர்ந்தெடுக்கும்.
ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ், அஸ்லே டோஜே, அன்னே எங்கர், கிறிஸ்டின் கிளெமெட், கிரை லார்சன் ஆகியோர் தான் இந்த ஆண்டின் ஐந்து பேர் கொண்டு குழு.
நோபல் கமிட்டியின் தலைவரான ஃப்ரைட்னஸ், இந்தக் குழு எந்த அழுத்தத்திற்கு அடிப்பணியாது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுவிட்டார். அவர் மறைமுகமாக சாடியது ட்ரம்பை தான் என்பது அனைவருக்குமே தெரியும்.
லார்சன் ட்ரம்ப் மேற்கொண்ட சில நிதி ரத்துகளை விமர்சித்திருந்தார்.
கிளெமெட் ட்ரம்பை கடுமையாக சாடியிருந்தார். எங்கர் ட்ரம்ப் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவித்ததில்லை. டோஜே சற்று ட்ரம்பிற்கு ஆதாரவாகத் தான் பேசிவந்தார்.
ஆக, ஐந்தில் ஒருவரே ட்ரம்பிற்கு ஓரளவு ஆதாரவானவர் என்று எடுத்துகொள்ளலாம்.

டோன் டவுன் செய்த ட்ரம்ப்
ஏனோ என்னவோ தெரியவில்லை. ட்ரம்ப் சமீபமாக தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்பதை டோன் டவுன் செய்து, ‘எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள்’, ‘எனக்கு தருவார்களா என்பது தெரியவில்லை’, ‘எப்படி இருந்தாலும் எனக்கு தரமாட்டார்கள்’, ‘எனக்கு நோபல் பரிசு தரக்கூடாது என்பதற்கான காரணத்தைத் தேடுவார்கள்’ என்று கூறுவதை தொடங்கிவிட்டார்.
இருந்தாலும், அந்த ஆசையை மட்டும் இன்னமும் விடவில்லை ட்ரம்ப்.
அதற்கான அடையாளம் தான் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட ‘The Peace President’ என்கிற பதிவு.
சமீபத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது இஸ்ரேல்-காசா போர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை, இந்தப் போர் நிறுத்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பு கையெழுத்திட்டுருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ட்ரம்பின் முயற்சிகளே.
அதனால், இதற்கு அழுத்தம் கொடுத்தே வெள்ளை மாளிகை அந்தப் பதிவைப் போட்டுள்ளது.
இன்னொரு பக்கம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ட்ரம்ப் நோபல் பரிசு பெறுவதைப்போல சித்தரிப்பு படத்தை தனது பிரதமர் அலுவல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் கடந்த திங்கட்கிழமையே முடிவு செய்யப்பட்டுவிட்டது.
THE PEACE PRESIDENT. pic.twitter.com/bq3nMvuiSd
— The White House (@WhiteHouse) October 9, 2025
அடிப்படை பிரச்னை
நோபல் பரிசுக்கான பரிந்துரையை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ம் தேதிக்குள் செய்திருக்க வேண்டும்.
பிப்ரவரி – மார்ச் மாதம் பரிந்துரைகள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்படும்.
மார்ச் – அக்டோபர் மாதம் ரிவ்யூ செய்யப்படும்.
அக்டோபர் மாதம் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்.
டிசம்பர் மாதம் நோபல் பரிசு வழங்கப்படும்.
இதன் படி பார்த்தால், ட்ரம்பின் பெயர் ஜனவரி மாதமே பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதே ஜனவரி 20-ம் தேதி தான். அவர் போர் நிறுத்தம் செய்ததாக கூறிய அனைத்தும் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் நடந்துள்ளது.
மேலும், அவரது பெயரை உலக தலைவர்கள் பரிந்துரைத்தது ஜூலைக்கு மேல் தான்.
ஆக, அவரது பெயர் அடுத்து ஆண்டு பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.
இந்த அடிப்படை சிக்கலாலும் ட்ரம்பிற்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
அடுத்த ஆண்டாவது, ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்குமா என்ன நினைக்கிறீர்கள் மக்களே?