• October 10, 2025
  • NewsEditor
  • 0

காசா மீதான தாக்குதலுக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் சில தினங்களுக்கு முன்பு கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் நமது எல்லாரின் மனதையும் உலுக்குகிறது.

காசாவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட போராட்டம்

இந்த அநீதியை நாம் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். போர் முடிவுக்கு வர வேண்டும். இதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கம்.” என உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் வாக்கு அறுவடைக்கான நாடகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாலஸ்தீன தேசம் காசாவில் கொல்லப்படும் மக்களுக்காகக் ‘காசாவை காப்போம்’ என்ற முழக்கத்துடன் திராவிட மாடல் கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போராடத் துவங்கியுள்ளீர்கள்! வரவேற்கிறேன்!!

காசா பெருநிலத்தில் கொடூர இஸ்ரேல் நாடு நேற்றுதான் குண்டு மழை பொழியத் தொடங்கியதா? கொத்துக்கொத்தாக நேற்றிலிருந்துதான் மக்கள் மடியத் தொடங்கினார்களா? இதே அக்டோபர் மாதம் 2023 ஆம் ஆண்டுக் காசாவை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியது.

இரண்டு ஆண்டுகளில் 67 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள், பெண்கள் எனப் பாகுபாடு இன்றிப் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படாத நாளே இல்லை எனும் அளவில் ஒவ்வொரு நாளும் இனப்படுகொலை நிகழ்ந்தேறியது.

ஒரு சிறிய ரொட்டித் துண்டுக்காக ஒவ்வொரு வேளையும் பசிக்கொடுமையால் அலைந்து திரியும் குழந்தைகள் பல்லாயிரம் பேர். ஆட்டுமந்தை போல் அடைக்கப்பட்ட முகாம்களில் கொடிய இஸ்ரேல் குண்டு வீசியதில் கொல்லப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேர்!

காசாவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட போராட்டம்
காசாவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட போராட்டம்

ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு ஈவு இரக்கமின்றி இந்த நூற்றாண்டின் இரண்டாவது மிகப்பெரிய இனப்படுகொலை காசாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையாகும்.

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மிகப்பெரிய மனித வேட்டை இப்போதுதான் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? இப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்தீர்களா?

ஆப்ரேசன் சிந்தூர் என்று மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசி போர்தொடுத்த போது அதனை வரவேற்று முதலமைச்சர் தலைமையில் பேரணி நடத்திய திராவிட மாடல் திமுக அரசு, மணிப்பூர் கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக எந்தப் பேரணியும் நடத்தவில்லை.

இருப்பினும் இன்றைக்குக் காசாவுக்காகக் கண்ணீர் வடிக்கிறீர்கள்! வரவேற்கிறோம்! இதேபோல 2009 இல் அருகிலிருக்கும் ஈழத்தாயகத்தில் கொடும்போரை நிகழ்த்தி இனவெறி சிங்கள அரசு இலட்சக்கணக்கில் எம்மினச்சொந்தங்களைக் கொன்று குவிக்கும்போது உங்கள் கண்கள் குருடாகி இருந்ததா?

அங்கே அலறிய மக்களின் குரல் விழாத அளவிற்கு உங்கள் காதுகள் செவிடாகிப் போயிருந்ததா? அன்றைக்கு நாங்கள் வடித்த கண்ணீர், சிந்திய ரத்தம், செத்து விழுந்த உடல்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? கதறிய கதறல்கள் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா?

சீமான்
சீமான்

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் 5 குண்டுகள் நெஞ்சில் தாங்கி செத்து விழுந்தபோது, எங்கள் அருமை தங்கை இசைப்பிரியா கொடூர சிங்களர்களால் குதறி கொலை செய்யப்பட்டபோது, அக்கொடுமைகள் எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனது ஏன்? அதற்காக ஒரு சொட்டு கண்ணீரும் நீங்கள் சிந்தாதது ஏன்?

ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கூட்டம், காசாவில் நடைபெறும் இனப்படுகொலையை இரண்டு ஆண்டுகளாகக் கைகட்டி வேடிக்கை பார்த்த திராவிட மாடல் கூட்டம், இப்போது திடீரென்று காசாவுக்காகக் கண்ணீர் சிந்தக் காரணமென்ன?

11.10.23 அன்றைக்கு இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் என்று பாலஸ்தீன மக்கள் படுகொலையை நியாயப்படுத்தித் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் செய்தி வெளியிட்ட நீங்கள், இன்றைக்குக் காசா மக்களுக்காகக் கதறித் துடிப்பது போல் நடிக்கக் காரணம் என்ன?

காரணம், விரைவில் இங்கே தேர்தல் வருகின்றது. தமிழ்நாட்டு இசுலாமிய மக்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய வேண்டும்.

இங்கே இருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ‘ஓட்டா’ இருக்கிறது? என்று கேட்டு அன்று அவர்களுக்காகப் போராட முன்வராத நீங்கள், ஓட்டு இல்லாத காசாவில் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்காகப் போராடுவதற்குக் காரணம் இங்கு வாழும் இசுலாமிய மக்களுக்கு ஓட்டு இருக்கிறது என்பதன்றி வேறென்ன?

இசுலாமிய மக்களின் வாக்குகளை மொத்தமாகப் பறிப்பதற்கான திட்டம்தான் காசா மக்கள் மீதான திராவிட மாடல் திருவாளர்களின் திடீர் கருணையும், கண்ணீரும்! இந்தக் கேவல நாடக அரசியலை, ஏமாற்று அரசியலை, சூழ்ச்சி அரசியலை எத்தனை காலத்திற்குச் செய்துகொண்டே இருப்பீர்கள்?

சீமான்
சீமான்

உண்மையிலேயே உங்களுக்கு மானுடப் பற்று இருந்தால், பிறர் துன்பத்திற்கு இரங்குபவர்களாக இருந்தால், அடுத்தவர் காயத்திற்கு, கண்ணீருக்கு கவலைப்படுபவராக இருந்தால், காசா மீது முதல் தாக்குதல் நடந்தவுடனே நீங்கள் கதறித் துடிக்காமல் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்தது எதனால்?

இப்போது ஏன் இந்த கரிசனம்? நான்கு மாதத்தில் தேர்தல் வருகிறது என்பதுதானே? தொலைதூர பாலஸ்தீன மக்களுக்காக இன்றைக்குப் பேரணி நடத்தும் நீங்கள், அருகிலிருக்கும் பாகிஸ்தான் மக்கள் ஆப்ரேசன் சித்தூரில் தாக்கியழிக்கப்பட்டபோது அதனை வரவேற்றுப் பேரணி நடத்தியது ஏன்?

தமிழர்களைக் கொன்று குவித்தாலும், தமிழன் இன உணர்வையும், மான உணர்வையும் விட்டுவிட்டுத் தங்களுக்கு வாக்குச் செலுத்திடுவான் என்ற நம்பிக்கையில், இலட்சக்கணக்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்வதைப்பற்றிக் கவலைப்படாமல், கொன்று குவித்தவர்களுடன் கூட்டணி வைத்து, இன்றளவும் அதிகாரத்தை, பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடூர மனம் படைத்த நீங்கள்,

இன்றைக்குக் காசாவுக்காகக் கருணை காட்டுவது போல், கண்ணீர் வடிப்பதுபோல் நடிக்கிறீர்கள்! விழிப்புணர்வற்ற சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடமென்று உங்கள் முன்னாள் தலைமைச் செயலாளர் எங்கள் ஐயா இறையன்பு எழுதியதைப்போல் நன்றாக நடிக்கிறீர்கள்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *