
`நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்கறாரு…’
காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக சீனியர் மாணவிக்கு அனுப்பிய ஆடியோ, ஒட்டுமொத்த பெற்றோர்களையும் கதிகலங்க வைத்திருக்கிறது.
அந்த ஆடியோவில், `அக்கா அஞ்சாறு மாசமா நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கேன். இதை யாருகிட்ட சொல்றதுன்னு தெரியல. என்னால படிப்புல கவனம் செலுத்த முடியல. ஹெச்.ஓ.டி சார் என்னை ரொம்ப பாலியல் ரீதியில துன்புறுத்துறாரு. ரொம்ப அசிங்கமா, அருவருப்பா பேசுறாரு. நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்குறாரு அக்கா.
`இண்டர்னல் மார்க்ல கை வச்சிடுவேன்…’
உன்னை தனியாகப் பார்க்கணும், என் ஆஃபீஸ் ரூமுக்கு வான்னு சொல்றாரு. அன்னைக்கு ஒருநாள் புக் வாங்குற மாதிரி வாட்ஸ்-அப்ல ஸ்டேடஸ் அவர் வச்சிருந்த ஸ்டேடஸ்க்கு, `வாழ்த்துகள் சார்’னு போட்டேன். அதுக்கு அவர், `தேங்க்யூ சோ மச் டார்லிங்’னு ரிப்ளை பண்றாரு அக்கா.

அப்போ அது எனக்கு சரியா தப்பானு கூட தெரியல. இந்த யுனிவர்சிட்டில பி.ஜி ஸ்டூடண்ட்ஸ்கிட்ட ஹெச்.ஓ.டி-லாம் இப்படித்தான் பேசுவாங்க போலனு நினைச்சிட்டேன். ஆனால் அதுக்கப்புறம் தினமும் லேட் நைட் போன் பண்ணி, `டிரஸ் இல்லாம போட்டோஸ் அனுப்பு. இல்லைன்னா உன் இண்டர்னல் மார்க்ல கை வச்சிடுவேன். அப்புறம் உன்னால எக்ஸாம் எழுத முடியாது’னு நேரடியாவே சொல்றாருக்கா.
`டாக்டரேட் பட்டம் வாங்கனும்னு எனக்கு ஆசை…’
அன்னைக்கு ஒருநாள் மாலினி மேடமும் மாதவைய்யா சாரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த வழியா தண்ணீர் குடிக்கப் போன என்னைப் பார்த்துவிட்டு என்னிடம் வந்து, ‘போட்டோஸ் கேட்டேனே அனுப்ப மாட்டியா? இன்டெர்னலில் பாஸ் பண்ணனும்னு உனக்கு ஆசை இல்லையா?’ அப்படின்னு ஓப்பனா கேட்டார். நான் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டேன் அக்கா.

இதையெல்லாம் என்னால் வீட்டிலும் சொல்ல முடியவில்லை அக்கா. வீட்டில் சொன்னால் என்னை படிக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் நான் படிக்க வேண்டும். டிகிரி முடித்துவிட்டு பி.ஹெச்.டி முடித்துவிட்டு டாக்டரேட் பட்டம் வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை அக்கா. ஆனால் இவர் இருக்கிற வரைக்கும் அது முடியாது அக்கா.
`இவரால 30, 40 பொண்ணுங்க பாதிக்கப்பட்டு இருக்காங்க…’
எனக்கு மட்டும் இப்படி இல்லைக்கா. கேரளாவிலிருந்து வந்து படிக்கிற நிறையப் பெண்களுக்கு இப்படித்தான் மெசேஜ் அனுப்புவார். அப்படி இவர் விரும்பிய ஒரு கேரளப் பெண், வேறு ஒரு பையனை லவ் பண்ணுச்சு. அது இவருக்குத் தெரிய வந்ததும், என்னைக் கூப்பிட்டு அந்தப் பெண்மேல் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொன்னார்.

அப்படி கொடுக்கலைன்னா உனக்கு இன்டெர்னல் மார்க் போடமாட்டேன்னு சொன்னாரு. அதனால பயந்து மூணு வாரம் நான் காலேஜுக்கே வரல. இதுக்கு ஒரு தீர்வு வேணும் அக்கா. என்னைப் போலவே இவரால 30, 40 பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க அக்கா. இதுக்கு ஒரு தீர்வு வேணும் அக்கா. நான் ஒரு பொண்ணு வெளியே வந்தால், என்னைப் போல நிறைய பொண்ணுங்க வெளிய வருவாங்க அக்கா. படுத்தால்தான் டிகிரி வாங்க முடியுமா… படித்து வாங்க முடியாதா?
மீடியாவைத் தவிர இவரைப் பற்றி நான் எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்லுவேன். அவர் என்னிடம் பேசிய ஆடியோ, வாட்ஸ்-அப்பில் அசிங்கமாக அனுப்பிய மெசேஜ் எல்லாமே என்னிடம் இருக்கிறது. எனக்கு நீங்கள் பண்ற உதவியால், என்னை மாதிரி பல பெண்களுக்கு நல்லது செய்வீங்க அக்கா..” என்று முடிகிறது அந்த ஆடியோ.

அதையடுத்து பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் மாதவைய்யா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன். அதன் தொடர்ச்சியாக மகளிர் காங்கிரஸார் புதுச்சேரி மகளிர் ஆணையத்தையும், மாணவர் காங்கிரஸார் காரைக்கால் பல்கலைக்கழகத்தையும் முற்றுகையிட்டனர். அதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டது.
இப்படியான சூழலில்தான், `மாணவிகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கக் கூடாது… பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா உள்ளிட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்… பல்கலைக்கழக மானியக் குழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்க வேண்டும்….’ என்று வலியுறுத்தி நேற்று இரவு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸார், ஷூ கால்களாலும் எட்டி உதைத்தனர். அதையடுத்து சுமார் 25 மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் பதற்றத்திற்குள்ளாகியிருக்கிறது.