
“இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என தேர்தலுக்குத் தேர்தல் கொளுத்திப் போடுவதும் கடைசியில், முந்தைய தேர்தலைவிட குறைவாகவே வாங்கிக் கொண்டு அமைதி ஆகிவிடுவதும் தமிழக காங்கிரஸாருக்கு பழகிப்போன சமாச்சாரம். ஆனால், இம்முறை அதிக தொகுதிகள் என்பதோடு ஆட்சியில் பங்கு என்ற முழக்கமும் காங்கிரஸ் வட்டாரத்தில் சத்தமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், 'அதிகாரத்தில் பங்கு' வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக தலைவர் விஜய்.
ஆட்சியில் பங்கு தருவோம் என விஜய் சொன்னதிலிருந்தே காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கைகோக்கலாம் என்ற பேச்சும் பலமாக அடிபட ஆரம்பித்துவிட்டது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டால் திமுக தலைமை சங்கடப்படக்கூடும் என்பதால் இத்தனை நாளும் அடக்கி வாசித்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தேர்தல் நெருங்குவதால் இப்போது வரிசைகட்டி வாய்திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.