
தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் வந்தார்.
நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அன்றிரவே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் புதிய மருத்துவமனை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
அதோடு, 49 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நிகழ்ச்சி மேடைக்கு வந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்துவிட்டு உடனே உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார்.
அதிர்ச்சியான உதயநிதி அவ்வாறு செய்யக் கூடாது என்றார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, எம்பி ஜோதிமணி, எம்எல்ஏ செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
தன்னை விட வயதில் குறைவானவரான உதயநிதி ஸ்டாலினின் காலில் திமுகவின் மூத்த எம்எல்ஏ காந்திராஜன் விழுந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் துணை சபாநாயகராக இருந்த காந்திராஜன், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.