
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… தூத்துக்குடியில் கார் தொழிற்சாலை… 10,000 கோடி முதலீடு… 20,000 கோடி முதலீடு… தமிழ்நாடுதான் இந்தியாவின் டெட்ராய்ட்… இந்தியாவின் ஜி.டி.பி-யில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்… பெருமிதப்படத்தக்க இவற்றின் வரிசையில் ‘இந்திய வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தியின் கேந்திரமாகத் தமிழ்நாடு வளர வேண்டும். அதற்காக, 2032-க்குள் ரூ.75,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் இலக்கு நோக்கி செயல்படுவோம்’ என்று லேட்டஸ்ட்டாக அறிவித்திருக்கிறார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களே. அதேசமயம், இப்படி வரிசைகட்டும் தொழிற்சாலைகளால் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் கேடுகள் பற்றிக் கொஞ்சமும் யோசித்ததாகவே தெரியவில்லை!
ஆம், தமிழ்நாட்டின் ஜீவாதாரங்களாக இருக்கும் காவிரி, தாமிரபரணி, வைகை, பாலாறு, தென்பெண்ணையாறு என்று அத்தனை நதிகளுமே தொழிற்சாலை கழிவுகளால் சீர்கெட்டுக் கிடக்கின்றன. தமிழ்நாட்டின் தலைநகரிலும் அதைச்சுற்றியும் ஓடிக்கொண்டிருக்கும் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றின் நிலை கிட்டத்தட்ட முடிந்துபோன கதை. தலைநகர் சென்னைக்குக் குடிநீர் கொடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல்வேறு நீர்நிலைகளும்கூட ஆலைக்கழிவுகள் சேருமிடங்களாகத்தான் இருக்கின்றன.
தாமிரபரணி நதி மாசடைந்துவருவதைத் தடுப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் குழுவே நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், மேலும் மேலும் மோசமாகிக் கொண்டேதான் போய்க்கொண்டிருக்கிறது, தாமிரபரணி நதியின் நிலை. இதேபோலத்தான் பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் குறித்து அவ்வப்போது பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் வழங்கி வருகிறது. ஆனால், அவையெல்லாம் அப்படி அப்படியேதான் இருக்கினறனவே தவிர, அரசமைப்புகளை துளியும் அசைத்துப் பார்த்தபாடில்லை. எல்லாமே, ‘வளர்ச்சி… வளர்ச்சி’ என்கிற கோஷத்துக்கு நடுவே புதைக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு, வளர்ச்சியை மட்டுமே நோக்கி வளர்ந்த எத்தனையோ நகரங்கள் இன்று மக்கள் வாழ்வதற்கான சூழலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். டெல்லி, கான்பூர், தாராபூர், சூரத் எனச் சுற்றுச்சூழல் பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் நகரங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அந்த வரிசையில், தமிழக நகரங்கள் ஒவ்வொன்றாக இப்போதே இணைந்துகொண்டுதான் இருக்கின்றன.
வளர்ச்சி, வருமானம், வேலைவாய்ப்பு இவையெல்லாம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நாம் வாழும் சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அப்போதுதான், வளர்ச்சியை மக்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டு அடையும் வளர்ச்சி ஆரோக்கியமற்றது.
சுவர் இல்லாமல்… இல்லை சித்திரம்!
– ஆசிரியர்