
அனைவருக்கும் பசுமை வணக்கம்…
‘2023-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 10,786 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மகாராஷ்டிரா-38.5%, கர்நாடகா-22.5%, ஆந்திரா-8.6%, மத்தியப்பிரதேசம்-7.2%, தமிழ்நாடு-5.9% என்கிற அளவில் இந்தத் தற்கொலைகள் நடந்துள்ளன’ என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் தரவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரம் என்று அறிந்தும் சில பிரச்னைகளுக்கான தீர்வுகளை, மத்திய, மாநில அரசுகள் முன்னெடுப்பதே இல்லை. அவற்றில் ஒன்றாக, ‘விவசாயிகள் தற்கொலை’யும் இணைக்கப்பட்டுவிட்டது.
‘2022-ல் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக்கப்படும்’ என்று சூளுரைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவில்லை; தற்கொலை எண்ணிக்கைதான் அதிகரித்தபடியே இருக்கிறது.
‘உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துகொண்டிருக்கிறது; 4-வது பொருளாதார நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது’ என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டே இருக்கிறார்கள், மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியாளர்கள். ஆனால், ‘நாட்டின் முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள், தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்களை அறிந்து, தீர்வைக் கண்டறிய நேரமோ, அக்கறையோ அவர்களுக்கு இல்லை.
‘விவசாய விஞ்ஞானி’ எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி, விவசாயப் பொருள்களுக்கு உற்பத்திச் செலவோடு 50% கூடுதல் விலை வைத்து, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாக ஒலிக்கிறது. ஆனால், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுத்தார்களே தவிர, களத்தில் உழைத்துக்கொண்டிருக்கும் பாரதத்தின் ரத்னங்களான விவசாயிகளைத் துளியும் கண்டுகொள்ளாமல், தற்கொலையை நோக்கித் துரத்திக்கொண்டுள்ளனர்.
பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கெல்லாம் வாரிவாரி கடன்களை வழங்குகின்றன, வங்கிகள். அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாத பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடியும் செய்கின்றன. ஆனால், கடன்கேட்டுப் படியேறும் விவசாயிகளை விரட்டி அடிக்கின்றன. ஒருவேளை, கடன் கிடைத்தாலும், இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் விவசாயியை வட்டிக்கு வட்டி, அபாரத வட்டி, ஜப்தி என்று தற்கொலையை நோக்கித் துரத்துகின்றன.
‘தமிழ்நாடு முன்னோடி மாநிலம்’ எனப் பெருமிதப்படுகிறது முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ அரசு. ஆனால், இங்கேயே 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்தத் தற்கொலைகளைத் தடுக்கும் வகையிலான ஒரு மாடலை உருவாக்க நேரமில்லை. இவ்வளவு ஏன்… அரசாங்க அதிகாரி ஒருவரால் திட்டமிட்டு உருவாக்கி சுழலவிடப்பட்ட ‘தர்பூசணி வதந்தி’, ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகளின் வருமானத்துக்கு வேட்டு வைத்தது. அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கக்கூட மனதில்லை, திராவிட மாடலுக்கு.
மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் மீது அக்கறையும் இல்லை; தற்கொலைகள் அதிகரித்தபடியே இருப்பது குறித்து அவமானமும் இல்லை. இத்தகைய போக்கு… நாட்டுக்கே நல்லதில்லை.
– ஆசிரியர்