
திருவனந்தபுரம்: சபரிமலையில் துவாரபாலகர் சாமி சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலையில் ஐயப்பன் சந்நிதியில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கமுலாம் பூசுவதில் முறைகேடுகள் நடந்ததாக ஆளும் இடதுசாரி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து கடந்த 4 நாட்களாக கேரளசட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் சபாநாயகர் ஏ.என். ஷம்சீர், சபையை சிறிது நேரம் ஒத்திவைத்தார். அதன்பிறகு ஐக்கிய ஜனநாயக முன்னணி அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளியேறியது. அப்போது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவை கண்காணிப்பு பணியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.