
புதுச்சேரி: "எங்களுடைய எண்ணம் எல்லாம் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதுதான். நிர்வாகத்தில் சில நேரங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு, கோப்புகள் திரும்ப அனுப்புவதும் உண்டு. நாங்கள் கோரும் தனி மாநில அந்தஸ்து கோரிக்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்" என ஆளுநர் உடனான மோதல் குறித்த கேள்விக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எங்கள் ஆட்சியில் கட்சி பாகுபாடு இல்லாமல் புதுச்சேரி மாநிலம் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதனடிப்படையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எதையும் பார்க்காமல் எல்லோருக்கும் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.