
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபம் சாட்டர்ஜி என்ற இளம் மலையேற்ற வீரர், உலகின் 8வது உயரமான சிகரமான மனாஸ்லுவை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் தனது லட்சியத்தை நோக்கி அவர் முன்னேறியுள்ளார்.
செப்டம்பர் 28 அன்று காலை 6.18 மணிக்கு, கடல் மட்டத்திலிருந்து 8,163 மீட்டர் உயரத்தில் உள்ள மனாஸ்லு சிகரத்தை அடைந்திருக்கிறார். இந்த சிகரம், நேபாளத்தின் மன்சிரி ஹிமால் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த சிகரம் மலையேறுபவர்களுக்கு மிகவும் அபாயகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. 18 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்ட இந்த சிகரம், உலகின் மிகக் கொடிய சிகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
சாட்டர்ஜியின் இந்த பயணம் மிகவும் சவாலானதாக இருந்திருக்கிறது. மலையேற்றத்தின்போது ஏற்பட்ட பனிச்சரிவிலிருந்து அவர் நூலிழையில் தப்பியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் “அது ஒரு பயங்கரமான தருணம், ஆனால் சரியான குழுப்பணியுடன் நாங்கள் அதைக் கடந்தோம்,” என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா மற்றும் அண்டார்டிகா ஆகிய கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களையும் அவர் ஏறியுள்ளார். ஓசியானியாவின் இரண்டு உயரமான சிகரங்களை வெறும் 49 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.
சுபம் சாட்டர்ஜி, தனது சாதனைகளின் மூலம் ஏற்கனவே லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.