
இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்த விருந்து எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள புகைப்படங்களின்படி, விமானப்படை ஆண்டுவிழாவைச் சேர்ந்தவை என்பது தெளிவாகிறது. இந்த பட்டியலை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் 7ம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறிவைத்த பாகிஸ்தான் பகுதிகளின் பெயர்களை உணவுகளுக்கும் வைத்துள்ளனர்.
இந்திய விமானப்படை அக்டோபர் 8, 1932ல் உருவாக்கப்பட்டது. இதை முன்னிட்டு பல விமானப்படைத் தளங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த மெனுவில்,
இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகள் எனத் தலைப்பிட்டு ‘தவறில்லாதது, ஊடுருவ முடியாதது மற்றும் துல்லியமானது’ என எழுதப்பட்டிருந்தது.
உணவுகள்
ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா
ரஃபிக்கி ரஹாரா மட்டன்
பொலாரி பனீர் மேத்தி மலாய்
சுக்குர் ஷாம் சவேரா கோஃப்தா
சர்கோதா தால் மக்கானி
ஜகோபாபாத் மேவா புலாவ்
பஹவல்பூர் நான்
Interesting menu prepared by Indian Air Force on the special occasion of #AirForceDay
IAF’s dinner menu had dishes named after Pakistan’s airbases which were bombed by the IAF during #OperationSindoor https://t.co/JQxV1YyZsZ pic.twitter.com/M1r4KlVqwy— Kiren Rijiju (@KirenRijiju) October 9, 2025
இனிப்புகள்
பாலகோட் டிராமிசு
முசாஃபராபாத் குல்ஃபி பலுதா
முறிக்கே மீதா பண்
இதிலுள்ள ராவல்பிண்டி, பாலகோட், பஹவல்பூர், முசாபராபாத், முரிட்கே ஆகிய நகரங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவை. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இங்குள்ள தீவிரவாத/ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலில் இரண்டு நாடுகளும் தாங்கள் வெற்றிபெற்றதாக அறிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டும் பரப்புரை மேற்கொண்டும் வருகின்றன. அத்துடன் இதில் அமெரிக்கா தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறிவருவதும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது.