• October 9, 2025
  • NewsEditor
  • 0

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் குழுக்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தனது உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நேரடியாக வருகை தந்த சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் அவரைக் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

வெங்கடேசன்

கரூரில் பிரசார பரப்புரை நடைபெற்ற நாளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வேகமாக இயக்கப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வாகனங்களை நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் சமாதானம் செய்வதற்காக உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் விசாரணைக்காகக் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருந்த நபர்களைத் தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சேலத்தில் இருந்து இருவர் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, ஒருவரை இறக்கிவிட்டு, கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசனை மட்டும் கைது செய்து கரூருக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

யார் அழைத்துச் சென்றார்கள் என்று விவரம் தெரியாமல் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் காவல்துறையினர் சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *