
Aஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், சண்டிகரில் உள்ள தனது செக்டார் 11 இல்லத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையை உலுக்கியிருக்கிறது.
2001ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், இந்திய காவல் சேவையின் உயர் பதவியான ஏடிஜிபியாக இருந்தவர். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார், அதே ஹரியானாவில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றி வரும் இவர், அலுவல் பணிக்காக ஜப்பான் சென்றிருக்கிறார்.
மனைவி இல்லாத அந்த நேரத்தில் சண்டிகரில் உள்ள வீட்டில் தன்னைத் தானே தனது போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் புரன் குமார். அப்பாவைக் காணவில்லை என்று தேடிய அவரது மகள், புரன் குமார் வீட்டின் தரைதளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இதையடுத்து வழக்கமாக வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கானக் காரணம் குறித்து விசாரித்து வருகிறது காவல்துறை.
இந்நிலையில் தனது கணவரின் இந்த தற்கொலைக்கு ஹரியானவின் டிஜிபி சத்ருஜீத் சிங் கபூர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிஜர்னியா உள்ளிட்ட 10 அதிகாரிகள் முக்கியக் காரணம் என்றும் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளால் தனது கணவர் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக புகார் அளித்திருக்கும் புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார், ஐஏஸ், “இது ஒரு சாதாரண தற்கொலை அல்ல. என் கணவர் SC பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிகாரம் மிக்க உயர் பதவியில் உள்ள அதிகாரிகளின் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளால், தகாத வார்த்தைகளால், அவமானங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டார். முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை SC/ST வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
சாதி அடிப்படையிலான பாகுபாடு, பதவிகளில் பாரபட்சம், வருடாந்திர அறிக்கையில் (ACR) முறைகேடுகள், அதிகாரப்பூர்வ தங்குமிடம் மறுப்பு மற்றும் நிர்வாகப் புகார்கள் மற்றும் அறிவிப்புகள் என பல்வேறு புகார்கள் அதிகாரிகள் மீது இருக்கின்றன.
காவல்துறை அமைப்பு இதுபோன்ற அதிகாரிகளால் சாதிய, அதிகார ஆணவத்தால் சீரழிந்து கிடக்கிறது. உயர் அதிகாரிகள், தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி என் கணவரை சித்திரவதை செய்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றனர். மூத்த அதிகாரிகளால் என் கணவருக்கு பல ஆண்டுகளாக திட்டமிட்ட அவமானம், துன்புறுத்தல் நடந்திருக்கின்றன.
மனைவியாக என் கணவருக்கு உரிய நீதியை வாங்கித் தருவேன். அதற்காக எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன்” என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார், ஐஏஸ்.