• October 9, 2025
  • NewsEditor
  • 0

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19 முதல் இந்திய அணி விளையாடவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான வீரர்கள் பட்டியலை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கார் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

அந்தப் பட்டியலைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் எதற்காக ரோஹித்தின் கேப்டன் பதவியைப் பறித்து சுப்மன் கில்லிடம் ஒப்படைத்தீர்கள், ஜடேஜாவை ஏன் ஒருநாள் அணியில் சேர்க்கவில்லை, எதனடிப்படையில் யாருக்கும் இல்லாத அளவுக்கு ஹர்ஷித் ராணாவை ஆல் ஃபார்மெட் வீரராக உயர்த்தி அணியில் வைத்திருக்கிறீர்கள் எனப் பல கேள்விகளை ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார்

அந்த வரிசையில் எழும் இன்னொரு முக்கியமான கேள்வி, 2023 உலகக் கோப்பையில் ஏழே போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அத்தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவரும், அதன் பிறகு காயத்துக்குச் சிகிச்சை மேற்கொண்டு ஓராண்டுக்குப் பின் மீண்டும் களத்துக்கு வந்து சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9 விக்கெட்டுகளுடன் நான்காவது இடம் பிடித்தவருமான முகமது ஷமி ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் தான் சேர்க்கப்படாதது குறித்து ஷமி முதல்முறையாகப் பேசியிருக்கிறார்.

தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஷமி, “ஆஸ்திரேலிய தொடருக்கு என்னைத் தேர்வு செய்யாதது குறித்த என்னுடைய கருத்தை மக்கள் அறிய விரும்புகின்றனர். தேர்வு செய்வதென்பது என் கைகளில் இல்லை.

அது தேர்வுக்குழு, பயிற்சியாளர், கேப்டன் ஆகியோரின் வேலை. அணியில் நான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இல்லை இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என்று நினைத்தால் அதுவும் அவர்கள் கைகளில்தான் இருக்கிறது.

முகமது ஷமி
முகமது ஷமி

நான் தயாராகத்தான் இருக்கிறேன். பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது உடற்தகுதியும் நன்றாக இருக்கிறது.

இன்னும் சிறப்பாகச் செயல்பட நான் முயற்சிப்பேன். ஏனெனில், களத்துக்கு வெளியில் நீங்கள் இருக்கும்போது உத்வேகத்துடன் இருக்க வேண்டும்.

துலீப் டிராபியில் நான் விளையாடினேன். என்னுடைய பவுலிங் நன்றாக இருந்தது. சுமார் 35 ஓவர்கள் நான் வீசினேன். எனது உடற்தகுதியில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.

மேலும், கேப்டன்சி மாற்றம் குறித்து பேசிய ஷமி, “இதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

இது பி.சி.சி.ஐ, தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எடுத்த முடிவு. கில்லுக்கு கேப்டன்சி அனுபவம் இருக்கிறது.

சுப்மன் கில் (கேப்டன்) - ரோஹித் சர்மா
Shubman Gill (Captain) – Rohit Sharma

கேப்டன் பொறுப்பை யாராவது ஒருவரிடம் கொடுக்க வேண்டிய சூழலில் கில்லை பி.சி.சி.ஐ தேர்ந்தெடுத்தது.

எனவே நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே கேப்டன்சி குறித்து யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. இது நம் கையில் இல்லை.

இன்று யாரோ ஒருவர் கேப்டன், நாளை வேறொருவர் அப்பதவியில் இருப்பார். இந்தச் சுழற்சி தொடரும்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *