
ரஜினி ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள பாலக்காடு சென்றார், அங்கேயும் பரபரப்பு. சமீபத்தில் ஆன்மிகப் பயணமாக உத்தரகாண்ட் புறப்பட்டுப் போனார், அங்கேயும் பரபரப்பு.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இமயமலைப் பயணத்துக்காக புனே செல்வதற்காக விமான டிக்கெட் பதிவு செய்திருந்தார்.
அப்போது பேய் மழை பெய்து அங்கே மலைகளில் நிலச்சரிவு ஏற்பட, சாலைகளில் பள்ளம், மேடுகள் உண்டானதால் இமயமலைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.
‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியைத் தவிர ஏனைய ஆர்டிஸ்டுகள் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கி வருகிறார் நெல்சன்.
ரஜினிக்குக் கிடைத்த இடைவெளியை இமயமலை செல்லப் பயன்படுத்தத் திட்டமிட்ட ரஜினி, கடந்த வாரம் பயணம் மேற்கொண்டார்.
கடந்த வாரம் தனது ஆன்மிக நண்பர்களுடன் விமானத்தில் பறந்து ரிஷிகேஷ் சென்றார். அங்கே ரஜினிக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர் வடமாநில ரசிகர்கள்.
அதை அடுத்து உத்தரகாண்ட் நிலப்பகுதியில் இருந்து 8000 அடி உயரத்தில் ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. புராண காலத்தில் சிவபெருமானை நினைத்து மகாபாரத கர்ணன் தவம் புரிந்த இடம் என்பதால் அது ‘கர்ண பிரயாக்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்கே ரஜினி தங்கி தியானம் செய்தார்.

அடுத்து ரஜினி பத்ரிநாத் கோயிலுக்குச் சென்றபோது போலீஸ் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள அர்ச்சகர்கள், பக்தர்கள் ரஜினியை சூழ்ந்துகொண்டு ‘ரஜினி சாபு… ரஜினி சாபு…’ என்று வடமாநிலத்தவர் செல்லமாக அழைக்க அவர்கள் அன்பில் திக்குமுக்காடி நெகிழ்ந்து போனார், ரஜினி.
அங்குள்ள பக்தர்களிடம் “என் பெயரைச் சொல்லாதீங்க, நாராயணா… நாராயணா…ன்னு சுவாமி நாமத்தைச் சொல்லுங்க” என்று அன்பாகச் சொல்லி அரவணைத்துக்கொண்டாராம், ரஜினி.
‘கர்ண பிரயாக்’ தரிசனத்துக்குப் பிறகு 8 ஆம் தேதி காலை பாபாஜி குகைக்குச் செல்வதற்கு தன் ஆன்மிக சகாக்களுடன் கால்நடையாகப் புறப்பட்டார் ரஜினி.
அங்கே இருந்த ரோட்டோரக் கடையில் டீ குடித்தார். அதன் பின்பு பாபா ஆசிரமத்திலேயே மதிய உணவு உண்டார்.

பாபா ஆசிரமத்தில் இருக்கும் இளம் துறவி வாசு வானானந்த சுவாமிகளை சந்தித்த ரஜினி, அவரிடம் அன்பைப் பகிர்ந்துகொண்டார்.
அநேகமாக அக்டோபர் 10 ஆம் தேதிக்குப் பிறகு விரைவில் உத்தரகாண்டில் இருந்து புறப்படும் ரஜினி சென்னைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.