
சமீபத்தில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடலோர மாவட்டம் ஒன்றுக்கு முதன்மையானவர் சென்றிருந்தபோது, அவரைச் சந்திக்க கட்சி நிர்வாகிகள் கூடியிருக்கிறார்கள். அங்கு வந்த முக்கிய மாஜி நிர்வாகி ஒருவரை, ‘மாவட்டம் கொடுத்த லிஸ்ட்டில் உங்கள் பெயரில்லை. உள்ளே விட முடியாது…’ என்று அதிகாரிகள் தடுத்திருக்கிறார்கள். ‘கட்சிக்காக உழைச்ச குடும்பம் நாங்க. என்னையவே விட மறுக்கிறீங்களா…’ என்று டென்ஷனாகியிருக்கிறார் அவர்.
இதையடுத்து, அங்கிருந்த சீனியர் அதிகாரிகளும் கட்சி சீனியர்களும் மாஜி நிர்வாகியை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ‘கட்சிக்காக உழைப்பவர்களை ஒதுக்குவதே இந்த மாவட்ட நிர்வாகிக்கு வேலையாகப் போய்விட்டது. சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துணையானவர் வந்திருந்தார். கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் துக்கம் விசாரிக்கவும் நூலகம் திறக்கவும், துணையானவரின் நேரத்தை மாவட்ட இளைஞரணி நிர்வாகி கேட்டிருந்தார். ஆனால், மாவட்ட நிர்வாகி அதில் கட்டையைப் போட்டு, துணையானவரைத் தடுத்துவிட்டார். இப்படி, சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை எல்லாரையும் தன்னைத் தாண்டி தலைமையிடம் யாரும் நெருங்கிவிடக்கூடாது என்று ஓரம்கட்டுகிறார் மாவட்ட நிர்வாகி’ எனப் பொருமுகிறார்கள் கடலோர மாவட்ட உடன்பிறப்புகள்!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஊராட்சி ஒன்றில், தி.மு.கவைச் சேர்ந்த ‘தாஸ’ பிரமுகர்தான் துணைத் தலைவராக இருக்கிறார். ‘பெரிய தொகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வின் வலதுகரம்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர், சமீபத்தில் பட்டா இடத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய வழக்கில், பெரும்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். காவல்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை நடத்தியும்கூட, ஆதாரங்கள் பக்காவாக இருந்ததால், ‘தாஸ’ பிரமுகர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், அவர்மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவர்மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்வதற்கு ஏற்பாடானதாம். அதற்கு முட்டுக்கட்டை போட்ட எம்.எல்.ஏ., அந்தக் காவல் மாவட்டத்தின் உயரதிகாரி ஒருவரிடம் ‘மணி’க்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதன் விளையாக, குண்டர் சட்டத்திலிருந்து தப்பியிருக்கிறாராம் அந்த ‘தாஸ’ பிரமுகர்!
ஆளுங்கட்சியின் ‘ஜில்’ மாவட்ட முன்னாள் நிர்வாகி, கமிஷன் பேரத்தில் கொழித்த விவகாரத்தில் சிக்கி, இப்போது ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். ஆனாலும்கூட, அவரது வாரிசின் அடாவடி அடங்கவில்லையாம். அதாவது, மாவட்ட நுழைவு வாயில் நகர் மன்றத்தின் துணையாக இருக்கும் அந்த வாரிசுப் பிரமுகர், நகர் மன்றத் தலைவரை ஓவர்டேக் செய்து நிழல் தலைவராக வலம்வருகிறாராம். ‘கணக்கு போட்டு கமிஷன் கேட்கும் கறார் பேர்வழி’ என்று பெயரெடுத்திருக்கும் வாரிசுப் பிரமுகரின் கையில், மெகா பிராஜெக்ட் ஒன்று சிக்கியிருக்கிறதாம்.
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவிருக்கும் ஒரு கட்டுமானப் பணிக்கு, இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களைப் பெற்றிருக்கிறாராம் அந்த வாரிசு. அதைக் கண்டுபிடித்த எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சிலர், அக்கட்சியின் தலைவர் ஜில் மாவட்டத்துக்கு வந்தபோது, பிரசாரக் கூட்டத்தில் அந்த விஷயத்தைப் பேச வைத்துவிட்டார்களாம். இந்த விவகாரத்தை ஆட்சி மேலிடமும் கையில் எடுத்திருப்பதால், கலங்கிபோயிருக்கிறார்களாம் தந்தையும் மகனும்!
மலர்க் கட்சியில், மாநிலத் தலைமை மாற்றத்திற்குப் பிறகு, அமைப்பு ‘கொத்துமீசை’ பிரமுகர், பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய்விட்டாராம். சமீபத்தில், மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் தலைநகரில் நடந்தது. அதற்கு, மாவட்டப் பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் மாஜி தலைவரின் விசுவாசிகள் என்பதால், கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் மாஜியின் காதுகளுக்குப் போய்விடுவதாக, ‘பார்வையாளர்களைக் கூட்டத்திற்கு அழைக்கக் கூடாது’ என்று கறார் உத்தரவு போட்டுவிட்டாராம் தற்போதைய தலைவர். வழக்கமாக, இதுபோன்ற உள்ளடி அரசியலில் சிக்கிக்கொள்ள விரும்பாத ‘கொத்துமீசை’ பிரமுகர், சீனியர்கள் புறக்கணிக்கப்பட்டாலோ, அவமதிக்கப்பட்டலோ பிரச்னையை டெல்லித் தலைமைக்குக் கொண்டுசென்றுவிடுவார். ஆனால், இப்போது ரொம்பவே அடங்கிக் கிடக்கிறாராம். இதன் பின்னணியில், ஏதோ மர்மம் இருப்பதாக யூகிக்கிறார்கள் சீனியர்கள்!
அல்வா மாவட்டத்தில், ‘80ஸ் ஹீரோயின்’ ஒருவரின் பெயர்கொண்ட தொகுதியைத் தன் வசம் வைத்திருந்த இலைக் கட்சி வக்கீல் புள்ளி, இப்போது டெல்லி பிரதிநிதியாகிவிட்டார். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்குக் குறிவைத்துக் காத்திருந்த அரை டஜன் இலைக் கட்சி நிர்வாகிகள், உற்சாகமாகத் தேர்தல் வேலைகளைப் பார்த்துவருகின்றனர். ஆனாலும், தொகுதியை விட்டுக்கொடுக்க விருப்பமில்லாத வக்கீல் புள்ளி, அடிக்கடி தொகுதிப் பக்கம் வந்துசெல்கிறாராம். அதோடு, கட்சி மீட்டிங்கில் இதர நிர்வாகிகள் பெயர் வெளியில் தெரியாதப்படி இன்ஃபுளூயன்ஸ் செய்துவிடுகிறாராம். அவர்மீது ஏகக் கடுப்பிலிருக்கும் அந்தத் தொகுதி நிர்வாகிகள் பலர், ‘இவரைக் கொஞ்சம் கன்ட்ரோல் செய்யுங்களேன்…’ என்று மேலிடத்துக்குப் புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார்களாம்!