
கோவை கீதாஹால் சாலையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான ‘காமராஜர் பவன்’ உள்ளது. இங்கு தான் கோவையின் மூன்று மாவட்ட தலைவர்களின் அலுவலகங்களும் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத் தலைவர் பதவியை விட்டு மயூரா ஜெயக்குமார் இறங்கிய போது தனது இடத்தில் தனது ஆதரவாளரான கருப்புசாமியை உட்கார வைத்தார்.
அதனால் மாவட்ட தலைவர் அலுவலகத்திலேயே தனக்கென ஒரு பிரத்யேக அறையை ஒதுக்கி அங்கே அமர்ந்து அரசியல் செய்து வந்தார் மயூரா ஜெயக்குமார். இந்தச் சூழலில் அண்மை மாற்றத்தில் கருப்புசாமிக்கும் கல்தா கொடுத்தது காங்கிரஸ் தலைமை. இதையடுத்து காமராஜர் பவனுக்கு போவதை தவிர்த்த மயூரா ஜெயக்குமார் இப்போது, ‘பெருந்தலைவர் பவன்’ என்ற அலுவலகத்தை கோவை – திருச்சி சாலையில் திறந்திருக்கிறார்.