
கடந்த முறை திமுக கூட்டணியில் நாகையில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் முகமது ஷாநவாஸை வெளியூர்காரர் என்று பிரச்சாரம் செய்தார்கள். அதையெல்லாம் மீறி ஆறாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ஜெயிக்க வைத்தது திமுக. இம்முறையும் தொகுதி உங்களுக்குத்தான் என ஸ்டாலினே சொல்லிவிட்டதாக ஷாநவாஸ் பெருமிதத்துடன் சொல்லி வருகிறார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் தொகுதிக்காக ஷாநவாஸ் சாதித்துக் கொடுத்தது கம்மிதான் என்பதால் இம்முறை அவருக்கான வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்று கணிக்கும் உள்ளூர் திமுக-வினர், நாமே போட்டியிட்டுப் பார்க்கலாம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.
இதனிடையே, “தொகுதியை இம்முறை விசிக-வுக்கு ஒதுக்காவிட்டாலும் நிச்சயம் அண்ணன் போட்டியிடுவார்” என விசிக தொகுதி செயலாளர் அறிவழகனின் விசுவாசிகள் ஊருக்குள் தம்பட்டம் அடிக்கிறார்கள். இன்னும் சிலரோ, “விசிக-வே போட்டியிட்டாலும் உள்ளூர்வாசியை நிறுத்துங்கப்பா” என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.