
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த நயன்தாரா ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்திருக்கிறார்.
தற்போது கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கேமரா முன்பான தன் பயணம் தொடங்கி 22 ஆண்டுகளானதை குறிப்பிட்டு நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கேமரா முன் நின்று இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. அந்த நேரத்தில் சினிமாதான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்குத் தெரியாது.

ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.