
Doctor Vikatan: குழந்தைகள் முதல் வீட்டிலுள்ள பெரியவர்கள்வரை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படும்போது, உடனே அணுகும்படி குடும்பநல மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். குடும்பநல மருத்துவரை எப்படித் தேர்வு செய்வது… அவர் சரியான நபர்தான் என்பதை எப்படி உறுதிசெய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் அருணாசலம்
புதிதாக ஓரிடத்துக்குக் குடிபோகிறீர்கள் என்றால், அந்தப் பகுதியில் மக்கள் அதிகம் நாடிச்செல்லும் மருத்துவர், நிச்சயம் நம்பகமான குடும்பநல மருத்துவராக இருப்பார்.
ஒரே ஏரியாவில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் சிகிச்சை பெற்றுதான் எந்த மருத்துவர் பெஸ்ட் என முடிவு செய்ய வேண்டும்.
நோயாளியின் நலனில் அக்கறை செலுத்துபவராக இருக்க வேண்டியது முக்கியம். தேவைப்படும் பட்சத்தில் முன்கூட்டியே டெஸ்ட் எடுக்கச் சொல்வது, அந்த டெஸ்ட் எடுக்கப்படுவதன் நோக்கம் சொல்வது, நோய் குறித்து விளக்குவது, அது வராமல் தடுப்பதற்கான வழிகளைச் சொல்வது போன்றவற்றை எல்லாம் புரியும்படி சொல்பவர், நிச்சயம் நல்ல மருத்துவராகவே இருப்பார்.
மிக முக்கியமாக, நோயாளியை பயமுறுத்தாமல், அதே சமயம் நோய் குறித்த தெளிவை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும்.

ஏற்கெனவே சொன்னபடி, ஒரே பகுதியில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால், உங்களுக்கு அவர்களில் யாரைப் பிடிக்கிறது என்று பார்த்து முடிவு செய்யலாம்.
சிலர் நிறைய பேசுவது உங்களுக்குப் பிடிக்கலாம். சிலருக்கு அதுவே பிடிக்காமல் போகலாம். எனவே, அது உங்கள் தனிப்பட்ட தேர்வு.
நீங்கள் தேர்வு செய்கிற மருத்துவர், விலை அதிகமான மருந்துகளைப் பரிந்துரைக்கிறாரா, விலை மலிவான மருந்துகளைக் கொடுக்கிறாரா, அவரது சிகிச்சையில் உடனே உடல்நலம் பெறுகிறதா என்றெல்லாம் பாருங்கள்.
ஊசி தேவையில்லை எனும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பவர் நல்ல மருத்துவராக இருக்கலாம்.
மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதில், மக்களுடைய மிகப் பெரிய கவலையே மருத்துவர் கட்டணம்தான். எனவே, உங்கள் ஏரியாவில் உள்ள மருத்துவர்களில் யார் நியாயமான கட்டணம் வாங்குகிறார்கள் என்று பார்த்தும் தேர்ந்தெடுக்கலாம்.
எனவே, மருத்துவரை அணுகும்போது அவர் உங்களை எப்படி நடத்துகிறார், அவரது சிகிச்சை உங்களுக்கு எந்த அளவுக்கு நிறைவைத் தருகிறது என்றெல்லாம் பாருங்கள்.

குடும்பநல மருத்துவர் என்பவர், நல்ல சிகிச்சையைக் கொடுப்பவர் மட்டுமல்ல, இந்தப் பிரச்னைக்கு இந்த மருத்துவரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என பரிந்துரைப்பவராகவும் இருக்க வேண்டும்.
அப்படி அவர் பரிந்துரைக்கும் மருத்துவரும் நன்றாகப் பேசக்கூடிய, நோய் குறித்து விளக்கக்கூடிய, குறைவான கட்டணம் வாங்கக்கூடியவராக இருப்பார்.
சரியான குடும்பநல மருத்துவரிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் சிகிச்சை பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.