
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ராஜ் குந்த்ராவும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து டெலிஷாப்பிங் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் ரூ.60 கோடி அளவுக்கு மோசடி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவரிடம் தொழிலை விரிவுபடுத்தப்போவதாக கூறி ரூ.60 கோடியை ராஜ் குந்த்ரா வாங்கினார். ஆனால் அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திக்கொண்டதாக குற்றம் சாட்டிய கோதாரி பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டார்.
ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காததால் கோதாரி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார். இப்புகார் தொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோரிடம் மும்பை போலீஸார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் தேடப்படும் நபர்கள் என்று மும்பை போலீஸார் அறிவித்துள்ளனர். இதனால் இருவரும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டும் என்று கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது ஷில்பா ஷெட்டி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஷில்பா ஷெட்டி யூடியூப் சேனல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற வரும் 25ம் தேதி கொழும்பு செல்லவேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். உடனே அழைப்பிதழ் இருக்கிறதா என்று நீதிபதி கேட்டார். அதற்கு, கோர்ட் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் அழைப்பிதழ் வரும் என்று வழக்கறிஞர் சொன்னார். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, “தம்பதியை முதலில் மோசடி செய்த பணம் ரூ.60 கோடியை செலுத்த சொல்லுங்கள். அதன் பிறகு வெளிநாடு செல்ல அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதோடு இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 14ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.