
கரூரில் தவெக விஜய் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலால் 41 பேர் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. தமிழக காவல்துறை அஸ்ரா கார்க் தலைமையில் ‘SIT’ அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சினிமா வட்டாரங்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர்.
அவ்வகையில் ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி NDTV செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் கரூர் சம்பவம் குறித்தும், ரசிகர்களின் கூட்டம் குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் ரிஷப் ஷெட்டி, “ஒரு ஹீரோவையோ அல்லது அவரது கதாபாத்திரத்தையோ நாம் விரும்பும் போதுதான் கதாநாயக வழிபாடு ஏற்படுகிறது. கதாநாயக வழிபாடுகளை தவிர்ப்பது நல்லது.
கரூர் கூட்ட நெரிசல் விஷயத்தில் நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது. இருப்பினும் அங்கு நடந்தது விபத்து என்றுதான் கூற முடியும். அவ்வளவு ரசிர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது முடியாத காரியம். அந்த நேரத்தில் யாராலும் ஒன்றும் செய்திருக்க முடியாது.
திடீரென கூடும் இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்? காவல்துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறுவது மிகவும் எளிதானது, ஆனால் சில சமயங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்களுக்கும் பல சிக்கல் உள்ளது.
இந்த விஷயத்தில் எல்லோரும் மீதும் தவறு இருக்கிறது. ஒருவரை மட்டும் கைகாட்டி குற்றம் சுமத்த முடியாது. எல்லோரும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும். அதனால்தான் இதை விபத்து என்று கூறிகிறேன்.” என்று பேசியிருக்கிறார்.