
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார்.
ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன.
2003-2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
சுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது.
அதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் அந்த விலைக்கு வாங்கப்படாததால் உலகின் விலையுயர்ந்த கால்பந்து வீரராக ரொனால்டோ பார்க்கப்பட்டார்.
பின் பல வருடங்கள் கழித்து 2021-ம் ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலேயே இணைந்தார்.
ஆனால் இணைந்த ஓராண்டிலேயே கிளப் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ.
அதன் பிறகு இரண்டரை வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாடினார்.
கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் அல் நஸர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” என் திட்டம் தெளிவாக இருக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்.
எனது கிளப்புக்கும், அணிக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
உலகக்கோப்பையை வெல்வதே என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.
உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். நான் ஓய்வு பெறும் போது, முழு திருப்தியுடன் இருப்பேன் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.