
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைந்த பிறகு, தற்போது டாடா நிறுவனங்களில் குழப்பம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. ரத்தன் டாடா உயிரோடு இருந்தவரை தனது சகோதரர் நோயல் டாடாவிடம் அதிகாரங்களை முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தார். இதனால் தற்போது பிரச்னைகள் ஆரம்பித்து இருக்கிறது.
டாடா நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக டாடா டிரஸ்ட் இருக்கிறது. இந்த டிரஸ்ட் நிர்வகிக்கும் போர்டு நபர்கள், டாடா சன்ஸில் உறுப்பினர்களாக இருப்பார்கள். டாடா சன்ஸ் குழுமம் தான் டாடா நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கிறது.
இந்த டாடா டிரஸ்டில் டாடா குடும்பம் மட்டுமல்லாது வெளிநபர்களும் அறங்காவலர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும் 4 அறங்காவலர்கள் டாடா நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிட ஆரம்பித்து இருக்கின்றனர் என்கிற தகவல் தான் தற்போது பரபரக்கிறது.
தற்போது டாடா நிறுவனங்களின் தலைவரான நோயல் டாடாவை ஓரங்கட்டிவிட்டு, 4 அறங்காவலர்கள் டாடா நிறுவனங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்கிறார்கள்.
நோயல் டாடாவிற்கு எதிராக டாரியஸ் கம்பட்டா, ஜஹாங்கீர், பிரமித் ஜவேரி, மெஹ்லி மிஸ்திரி ஆகியோர் கூட்டு சேர்ந்துள்ளனர்.
நோயல் டாடாவை ஓரங்கட்ட முயற்சி?
மொத்தமுள்ள 7 அறங்காவலர்களில் நோயல் டாடா உட்பட 3 பேர் தனி அணியாக இருக்கின்றனர். டாடா நிறுவனங்களில் மெஹ்லி மிஸ்திரி குடும்பத்திற்கு சொந்தமான சாபூர்ஜி பாலன்ஜி நிறுவனத்திற்கு 18 சதவீத பங்கு இருக்கிறது. எனவே நோயல் டாடாவிற்கு எதிராக கூட்டு சேர்ந்துள்ள 4 அறங்காவலர்களும் டாடா டிரஸ்ட் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள், இயக்குனர்களை நியமிப்பது, சம்பள கமிட்டி போன்றவற்றில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்த முயற்சி செய்கின்றனர்.
மெஹ்லி மிஸ்திரி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது தன்னை கலந்து ஆலோசிப்பதில்லை என்று நினைக்கிறார். எனவேதான் தன்னுடன் மேலும் 3 அறங்காவலர்களை ஓரணியில் திரட்டி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் பட்டியலில் இருந்த முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் விஜய் சிங்கை மீண்டும் அதே பதவியில் நியமிப்பது தொடர்பாக அறங்காவலர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் நோயல் டாடா உட்பட அவரது ஆதரவு அறங்காவலர்கள் விஜய் சிங்கை மீண்டும் டாடா சன்ஸ் போர்டில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் மிஸ்திரி தலைமையில் 4 அறங்காவலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. இது தவிர டாடா சன்ஸ் போர்டில் மேலும் 3 இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இடங்களை நிரப்புவது தொடர்பாகவும் அறங்காவலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து 4 அறங்காவலர்களும் டாடா சன்ஸ் போர்டை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், டாடா டிரஸ்ட் துணைத்தலைவர் வேணு சீனிவாசன், அறங்காவலர் கம்பட்டா ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினர்.
அவர்கள் இப்பிரச்னையை தீர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். நான்கு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடைசி ஒரு மணி நேரத்தில் கலந்து கொண்டார் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
இந்த சந்திப்பின்போது, கம்பெனிகளின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் டாடா சன்ஸ் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், கம்பெனியின் நலனுக்கு எதிராக இருக்கும் அறங்காவலர்களை நீக்குவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக நோயல் டாடாவிற்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்புக்கு பிறகு நான்கு பேரும் தனியாக ஆலோசனை நடத்தினர். ரத்தன் டாடா இறந்து நாளையோடு ஒரு ஆண்டு முடிகிறது. அதற்குள் கம்பெனிகளை நிர்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தை டாடா குரூப் தொடர்ந்து தனியார் நிறுவனமாக வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் டாடா சன்ஸ்சில் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மிஸ்திரி குடும்பத்திற்கு சொந்தமான சாபூர்ஜி பாலன்ஜி நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்றும், இதன் மூலம் தங்களிடம் இருக்கும் பங்குகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடியும் என்று கருதுகிறது.
ரத்தன் டாடாவிற்கு நெருக்கமாக இருந்தவர் தான் மெஹில் மிஸ்திரி. எனவேதான் அவரை டாடா டிரஸ்டில் ரத்தன் டாடா சேர்த்தார். இப்போது ரத்தன் டாடா சேர்த்த நபரே டாடா நிறுவனங்களுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்.