• October 8, 2025
  • NewsEditor
  • 0

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா (29) என்பவர் தனது காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு மேம்பாலத்தின் தடுப்பையும் உடைத்துக்கொண்டு கடலுக்குள் சென்றது.

கடற்பகுதி மணற்பாங்கான இடமாக இருந்தது. கார் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்தது. காருக்குள் இருந்த பதிவாலா காரில் இருந்து வெளியில் வந்தார்.

ஆனால் அவருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. கார் மேம்பாலத்தில் இருந்து கடலுக்குள் விழுந்ததை அங்குப் பாதுகாப்புப் பணியில் நின்ற காவலர்கள் சுஹாஸ் மற்றும் பாண்டுரங்க் பார்த்தனர். அவர்கள் ஓடி வந்து பார்த்தபோது காரில் இருந்த நபர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தார்.

மீட்ட காவலர்கள்

உடனே அவர்கள் இரண்டு பேரும் கடலுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றினர். உள்ளூர் மக்களின் துணையோடு காரில் இருந்த நபர் கயிறு கட்டி மேலே தூக்கப்பட்டார். அவர் கடல் தண்ணீரை அதிக அளவில் குடித்து இருந்தார். அவரை கடல் பாலத்திற்குக் கொண்டு வந்தபோது அவரால் சரியாகப் பேச முடியவில்லை. ஆனால் மேலிருந்து கீழே விழுந்ததில் அவருக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரியை எடுத்து சோதித்தபோது அவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து பொது சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தியது, மது அருந்திவிட்டு கார் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து பதிவாலாவின் குடும்பத்தினர் கூறுகையில், ”பதிவாலா காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது மற்றொரு பி.எம்.டபிள்யூ கார் இடித்துக்கொண்டது. இதனால் பதிவாலாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *